“எந்தக் காலத்திலும் பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை".. ராமதாஸுக்கு பாலு பதிலடி!
சென்னை: "சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராயர் நகர் அலுவலகத்துக்கே அனுப்பி உள்ளது" என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ். 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முன்னதாக இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். எனினும் திட்டமிட்டபடி 25 ஆம் தேதி திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி.
இந்நிலையில் ராமதாஸூம், அன்புமணியும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ளனர். பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராமதாஸ் நடத்துக்கும் கூட்டத்துக்கு போட்டியாக ஆக. 9-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், "பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் ஆக. 9-ம் தேதி நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியிருப்பதால் அக்கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாஅட்டுகளை முன்வைத்துள்ளார்.
அன்புமணி பொதுக்குழுவை கூட்டியிருப்பது சட்டவிரோதம் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் வழக்கறிஞர் பாலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படியே கூட்டப்படுகிறது. மேலும், பாமக பொதுக்குழு வரும் 16ம் தேதி நடக்கும் என சமூக வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பில் யார் வெளியிட்டார்கள் என்பது இல்லை. பாமக விதியின்படி ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு வாரத்துக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "எந்தக் காலத்திலும் பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதலே சென்னையில்தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராயர் நகர் அலுவலகத்துக்கே அனுப்பி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications