ஐ.பெரியசாமியின் வீட்டு மாடியில் பூட்டப்பட்ட மர்ம அறை! பூட்டை உடைக்க சுத்தியலுடன் சென்ற ED அதிகாரிகள்
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டின் மாடியில் உள்ள அறை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் அதன் சாவியை கொடுக்க அந்த வீட்டில் உள்ளோர் மறுப்பதால் சுத்தியலை கொண்டு அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு திமுகவினர் குவிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். அங்கு ஐ.பெரியசாமியோ அவரது குடும்பத்தினரோ இல்லை என சொல்லப்பட்டது.
அவர்கள் இல்லாவிட்டாலும் வீட்டை சோதனையிட வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டதற்கு அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து 20 நிமிடங்கள் அங்கேயே அதிகாரிகள் இருந்தனர். பின்னர் பெரியசாமியிடம் கேட்டுவிட்டு அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
அந்த வீட்டில் அவர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அந்த வீட்டின் மாடிக்குச் சென்றனர். அங்கு ஒரு அறை பூட்டப்பட்டு இருக்கிறது. அந்த அறைக்கு பெரியசாமி கூட இதுவரை போனதில்லை என சொல்லப்படுகிறது. யாரும் பயன்படுத்தாவிட்டாலும் அந்த அறையை சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு அங்கிருந்த காவலர்கள் மறுத்தனர். மேலும் தங்களிடம் சாவி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து கதவின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்து சுத்தியலுடன் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அவருடைய எம்எல்ஏ மகனுக்கும் தனித்தனியே ஒரு அறைகள் உள்ளன. இந்த நிலையில் அந்த அறைகளுக்குச் செல்லும் நுழைவுவாயில் திடீரென பூட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications