தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி அறையில் புகுந்த அமலாக்கத்துறை...அதிகாரிகள் கையில் சிக்கியது என்ன
சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் அமாலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் நடத்திய சோதனை நிறைவடைந்தது. ஊழல் புகார் குறித்த முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடைபெறுகிறது.

தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையுடன் சோதனை நடைபெற்றது.

தலைமை செயலகத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றுப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கை மூலம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திமுக அரசை மத்திய அரசு மிரட்டிப்பார்க்கிறதா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications