ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு முடிந்து ‘சூட்கேஸ்’ உடன் கிளம்பிய அதிகாரி.. உள்ளே டிஜிட்டல் ஆவணங்கள்?
சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில் சில கோப்புகளை டிஜிட்டல் ஆவணப்படுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரி ஒருவர் சூட்கேசில் ஆவணங்களுடன் சென்றுள்ளார்.
சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 11 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

பணமோசடி வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் துரைராஜ் நகரில் உள்ள வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆர்.எம். காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திராணி வசித்து வருகிறார். அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் கார் மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் பயன்படுத்தும் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11 மணி நேரமாக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஐ.பெரியசாமியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில் சில கோப்புகளை டிஜிட்டல் ஆவணப்படுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரி ஒருவர் சூட்கேசில் ஆவணங்களுடன் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications