பண மோசடி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்
சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜராகும்படி தற்போது மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் துறை அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் சில காலம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்.

அந்த சமயத்தில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகச் செந்தில் பாலாஜி பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 11ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகளில் ஒன்றைத் தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications