அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொத்துகள் பறிமுதல்? அமலாக்கத் துறையின் அடுத்த மூவ் என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொத்துகள் பறிமுதல் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது.
இந்த நிலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வந்த நிலையில அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாகவும் தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அழைத்தனர்.

ஆனால் அதற்குள் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே ஐயோ, என நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினார். பிறகு அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது இசிஜி இயல்பானதாக இல்லை.
இதையடுத்து காலை 9 மணிக்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பொதுவாக போலீஸார் முக்கியஸ்தர்களை கைது செய்யும் போது அவரிடம், அவருடைய வழக்கறிஞர், அவருடைய உறவினர்களிடம் கைது வாரண்டை போலீஸார் கொடுப்பார்கள்.
ஆனால் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது நடவடிக்கையில் எந்த வாரண்ட் காப்பியும் உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. உறவினர்களிடமும் கைதாகும் நபரிடம் வாய் வார்த்தையாக சொன்னால் போதுமானது என தெரிகிறது.
2011- 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2018 இல் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில் பாலாஜி வழக்குத் தொடர்ந்தார். இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கும் அமலாக்கத் துறை விசாரணைக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையை உசச்நீதிமன்றம் அண்மையில் நீக்கியது. இதனால் பழைய வழக்கானது சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை வைக்கும். அதை பரிசீலிக்கும் நீதிபதி அதற்கான உத்தரவை பிறப்பிப்பார்.
மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். செந்தில் பாலாஜியை சென்னையில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படாது என்று தெரிகிறது. அமலாக்கத் துறையின் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அமலாக்கத் துறையின் கைதின் போதே அவர் குற்றவாளி என பாவித்தே கைது செய்வார்கள். மற்ற வழக்குகளில் அரசு தரப்பு அவர் குற்றவாளி என நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கில் தான் நிரபராதி என்பதை செந்தில் பாலாஜிதான் நிரூபிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரமும் அமலாக்கத் துறைக்கு உண்டு என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications