மீனு நழுவிடுச்சே.. பட்ட பாடெல்லாம் வீணா? பெருஸ்ஸா மாட்டும் திமிங்கலம்.. கமலாலயத்தில் பெரும் நிசப்தம்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி இடையே நடந்து கொண்டிருப்பது உண்மையா? அல்லது அரசியல் ஸ்டண்ட்டா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.. மற்றொருபக்கம் 2 கட்சியிலுமே இந்த முடிவை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை?
அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

அதிமுக - பாஜக: அதிமுகவை போலவே, தமிழக பாஜகவினரும் அதிமுக விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.. கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்..
சிறுபான்மை ஓட்டுக்கள்: எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி + மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள்.
அண்ணாமலையை தாக்கி பேசினாலும்கூட, இதுவரை மேலிட பாஜகவை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை.. 2 நாட்களுக்கு முன்புகூட, டெல்லி சென்ற அதிமுக தலைவர்கள், அமித்ஷாவை சந்திக்க எவ்வளவோ முயன்றனர்..
மாநில தலைமை: "மாநில தலைமையை மாற்றினால்தான் கூட்டணி" என்று நட்டாவிடம் மெசேஜ் பாஸ் செய்தார்களாம். அதற்கு, "அண்ணாமலையை மாற்ற முடியாது, போய் தேர்தல் வேலையை பாருங்கள்" என்று மேலிட பாஜக கறாராக சொல்லிவிட்டதாம். இதற்கு பிறகுதான், கூட்டணி முறிவை அதிமுக அறிவித்துள்ளது.
மற்றொருபுறம், சிறுபான்மை ஓட்டுக்களை வெல்லவே அதிமுக இந்த முடிவை அறிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி யோசித்திருந்தாராம்..
அன்வர் ராஜா: இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கியிருந்தது. இதைத்தான் மூத்த தலைவர் அன்வர்ராஜா, எடப்பாடியிடம் பலமுறை எடுத்து சொன்னாராம்.
அதற்கேற்றவாறு, பாஜகவை தவிர்த்துவிட்டு, தேர்தலை சந்திக்கவும், எடப்பாடி முடிவு செய்திருந்தபோதுதான், திடீரென ஓபிஎஸ் உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டாராம்.. பாஜகவுடன் தான் கூட்டணி என்பதை, எடப்பாடியை கேட்காமலேயே அறிவித்து விட்டாராம்.. இந்த கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்றுவரை இருக்கத்தான் செய்கிறதாம். அதனால்தான், ஓபிஎஸ் உடன் இருக்கும்வரை பாஜகவை கழட்டிவிட முடியாது என்பதை உணர்ந்து, ஓபிஎஸ்ஸை வெளியேற்றியதாக செய்திகள் வந்தன.
2 பிரிவுகள்: கடந்த எம்பி தேர்தலிலிருந்தே, பாஜக கூட்டணியை விரும்பாமல், மென்று விழுங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போது ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கும் மனநிலைமைக்கு வந்துள்ளனர்.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று சிவி சண்முகம் அப்போதே ஆவேசமாக சொல்லியிருந்தார்... இப்போதும் சிவி சண்முகம்தான் இதே காரணத்தை எடுத்துரைத்து வருகிறார்.
ஒருவேளை, இந்த காரணம் உண்மையானால், இந்த தலைவர்கள் ஒன்றுசேர்ந்து கடந்தவாரம்கூட, டெல்லி தலைவர்களை சந்தித்து பேசியது? ஏன் என்ற சந்தேகமும் வலுக்கிறது.
சமாதானம்: இப்போதுகூட, தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், கிருஷ்ணசாமி , ஜிகே வாசன், போன்றோர், பாஜகவுடனான பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருவதாகவும், எப்படி பார்த்தாலும், இந்த கூட்டணியை மீண்டும் இணைத்துவிடுவார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்
அதுமட்டுமல்ல, விஜயபாஸ்கர் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. நெடுஞ்சாலை துறை வழக்கும் சில நாட்களில் வரப்போகிறது.. இதைத்தவிர, மேலும் சில வழக்குகளில் அதிமுக தலைகள் சிக்கி உள்ளதால், பாஜக உறவை ஒரேடியாக முறித்து கொள்ளாது என்கிறார்கள்.
ஜவாஹிருல்லா: எனவே, அண்ணாமலையை பதவி நீக்கம் செய்து, தங்களுக்கு தங்களுக்கு இணக்கமான ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கான அதிமுகவின் தந்திரமாகவே, அதிமுகவின் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியானால், பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக தண்டிக்க அதிமுகவுக்கோ, அதன் தலைமைக்கோ தைரியம் கிடையாது என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா சொல்லும் கூற்று உண்மையா??
"இன்றைக்கும் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பல்லாம் அழகிற்காக மட்டுமே" என்று காங்கிரஸின் கேஎஸ் அழகிரி சொல்லும் கூற்று உண்மையா? "பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்" என்று எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு போட்டதாக செய்திகள் கசிந்தது ஏன்??
திமுக ஓட்டுக்கள்: ஈரோடு இடைத்தேர்தலின்போது, பிரச்சார நேரத்தில் மட்டும் பாஜகவினரை அதிமுக மேலிடம் தவிர்த்த நிகழ்வை இந்த தமிழகமே பார்த்தது.. இதை யாரும் மறுத்துவிடவும் முடியாது. இப்போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும், கூட்டணியை முறித்துவிடுவதால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுகவால் வெல்ல முடியுமா? திமுகவுக்கு செல்லவிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்களை தடுத்துவிட முடியுமா??
அதிமுகவுக்குள்ளேயே 2 பிரிவுகள் உள்ளன.. ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் போன்றோர் எல்லாமே ஓரணியிலும், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் என பாஜகவுக்கு ஆதரவாளர்கள் மற்றொரு அணியிலும் உள்ளனர். இதைத்தவிர, கிருஷ்ணசாமி, வாசன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் என கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளபோது, சொந்த கட்சியிலும், சொந்த கூட்டணியிலும் உள்ளவர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்??
கருத்து தலைவர்கள்: பாஜகவில் இதுவரை யாருமே, கூட்டணி முறிவு குறித்து கருத்து சொல்லவில்லை.. ஒருவேளை நாளைக்கு 2 கட்சியும் சேர்ந்துவிட்டால் என்னாவது என்று கருத்து சொல்ல பயப்படுகிறார்களா? அல்லது அதிமுகவின் உறுதிப்பிடிப்பு மீதான சந்தேகமா? அல்லது மேலிட உத்தரவு ஏதாவது வந்துள்ளதா???
இதில் எந்த கேள்விகளுக்கும் இதுவரை நமக்கு விடை தெரியவில்லை. அதேசமயம், இவ்வளவு நடந்தும் அண்ணாமலை அமைதி காத்து வருகிறார்.. இந்த மவுனத்துக்கு பின்னால் மறைந்திருந்து வீசப்போகும் "புயல்" என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications