நரித்தனம்.. கூட்டணியையும் உடைச்சிட்டார்.. “பொறியில் சிக்கிய எடப்பாடி”.. சீறிய மருது! ஓபிஎஸ் பிளான்?
சென்னை : எடப்பாடி பழனிசாமி தனக்கு மட்டும் தனியாக கூட்டணி அமைத்துக்கொண்டார். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கூட்டணி இல்லாத நிலையை உருவாக்கினார். அவருக்கு வேண்டப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் கூடுதல் பணம் கொடுத்தார். 10.5% இட ஒதுக்கீட்டை தருவதாக அறிவித்து வன்னிய மக்களையும் ஏமாற்றி, தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சரிவையும் உருவாக்கினார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கட்சிக்கு புதிதாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில்நடைபெற்றது.

மருது அழகுராஜ்
இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான். நாற்காலிக்கு பித்துப்பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓ.பி.எஸ். குப்பை பொறுக்கியவர் விமானத்தை இயக்கி அதை இறக்கத் தெரியாமல் சுற்றிக்கொண்டு உள்ளார். ஜெயலலிதா தனக்குப் பின்னால் தான் சுமந்த தலைப்பாகையை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்தார். ஓபிஎஸ் தான் அடுத்த அதிமுக தலைவர் என ஜெயலலிதா இரண்டு முறை முதல்வராக்கி அடையாளம் காட்டினார்." எனப் பேசினார்.

நோட்டீஸ்
ஓபிஎஸ் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய நிலையில், ஓபிஎஸ் அதிமுக பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்துவதை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், கட்சி பெயரை பயன்படுத்த முடியாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி ஓபிஎஸ் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பேசியுள்ளார். தாஜ்மஹால் உரிமைக்கு ஷாஜகானுக்கே நோட்டீஸ் அனுப்புவார். எடப்பாடி பழனிசாமி உச்சிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையாருக்கு உரிமை இல்லை என்று நோட்டீஸ் அனுப்புவார். தன்னோடு ஒரு குழுவைச் சேர்த்துக்கொண்டு சர்வாதிகார அரசியலை முன்னெடுப்பதற்கு எடப்பாடி முயற்சிக்கிறார் எனக் கூறியுள்ளார்.

கூட்டணியை உடைத்துவிட்டார்
மேலும், மருது அழகுராஜ் பேசுகையில், அதிமுக ஆட்சியை நான்கரை ஆண்டு காலம் நகர்த்திச் சென்றுவிட்டார் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்புக்கான தகுதி வந்துவிடாது. தலைமைக்குத் தகுதி என்பது தரம் பார்த்து, குணம் பார்த்து, ஆற்றல் அறிவு பார்த்து, பெருந்தன்மை பார்த்து வரக்கூடியது. அவரால் தான் ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தை வழிநடத்த முடியும், இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை மட்டுமல்ல, அதிமுக அமைத்திருந்த கூட்டணியையும் உடைத்தெறிந்துவிட்டார். ஒற்றுமை என்பதை கெட்டவார்த்தை என நினைக்கும் ஒருவர் ஒரு கட்சிக்கு தலைமை தாங்க முடியாது. தலைமைப் பதவியைத் தக்கவைக்க எத்தகைய எல்லைக்குச் சென்றாலும், அவரால் அதில் நிலைகொள்ள முடியாது.

கலெக்ஷனை வாங்கி கல்லா பெட்டியில்
எடப்பாடி பழனிசாமிக்கு, கலெக்ஷனை வாங்கி கல்லாப் பெட்டியில் போடும் வசூல் திறமைதான் இருந்ததே தவிர, கட்சியையும், ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தும் திறமை இல்லை. அதனால் தான் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமையாமல் போனது. ஒரு தலைவனுக்கு, நெளிவு சுளிவு வேண்டும். களத்தைக் கணித்துச் செயல்படும் பக்குவம் வேண்டும், அரசியல் சூழலுக்கு ஏற்பட கூட்டணி மேகங்களை ஒன்று திரட்டி வெற்றியைப் பெற வேண்டும். அதுதான் நல்ல தலைவனுக்கு அழகு.

தனக்கு மட்டும் கூட்டணி
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவருக்கு மட்டும் தனியாக கூட்டணி அமைத்துக்கொண்டார். அவருக்கு வேண்டப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் கூடுதல் பணம் கொடுத்தார். 10.5% இட ஒதுக்கீட்டை தருவதாக அறிவித்து வன்னிய மக்களையும் ஏமாற்றி, தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சரிவையும் உருவாக்கினார். தனக்கு மட்டும் கூட்டணியை அமைத்துக்கொண்டு, தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கூட்டணி இல்லாத நிலையை உருவாக்கினார். புதிய தமிழகம், அமமுக, தேமுதிக ஆகியவை கூட்டணியில் இருந்திருந்தால் தென் மாவட்டங்களில் வென்றிருப்போம். அமித்ஷா, ஓபிஎஸ் அறிவுறுத்தியும் கேட்காமல், இடி அமீன் போல செயல்பட்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு உதவினார்.

எல்லா தேர்தலிலும் தோல்வி
குப்பை பொறுக்குபவன் விமானம் ஓட்ட ஆசைப்பட்டால் இதுதான் நடக்கும். வழிகாட்டுதல் குழுவில் அனைத்து சமூகத்தினருக்கும் இடம் கொடுத்தார் ஓபிஎஸ். ஆனால், ஈபிஎஸ் தனது சமூகத்தினருக்கு மட்டுமே இடம் கொடுத்தார். அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பு இல்லாதவர் ஈபிஎஸ். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என அத்தனை தேர்தல்களிலும் அதிமுகவை தோல்வியடையச் செய்துவிட்டு தலைமை பொறுப்புக்கு எப்படி எடப்பாடி பழனிசாமி தகுதியானவர் ஆவார்?

இனிப்பை ஊட்டி முதுகில் கத்தி
ஒருபக்கம் இனிப்பை ஊட்டிவிட்டு, முதுகில் கத்தியைச் சொருகுபவர் எடப்பாடி பழனிசாமி. இரட்டைத் தலைமை தான், ஒற்றைத் தலைமை கற்பனை எனச் சொன்னவர் பிறகு எப்படி ஓபிஎஸ்ஸை வெளியேற்றும் முடிவுக்கு வந்தார்? ஓபிஎஸ் பதறாத பண்பாளர். அதிர்ந்து பேசமாட்டார். எடப்பாடி பழனிசாமி மேடையில் கூட எரிந்து விழக் கூடியவர். கை குலுக்கச் சென்றால் கூட கையை விலக்குபவர். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார். அந்த மாயை விலகும் நேரம் வந்துவிட்டது. இயக்கத்தை வழிநடத்தும் தகுதி ஓபிஎஸ்ஸுக்கே உண்டு என்பதை தொண்டர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.

யாராலும் மாற்ற முடியாது
அதிமுக உட்கட்சி விதிப்படி, பொதுக்குழு செயற்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரங்கள் இருந்தாலும், தலைமைப் பொறுப்பை தேர்வு செய்யும் அதிகாரம் அடிப்படைத் தொண்டர்களுக்கே உண்டு என்ற விதியை யாராலும், எப்போதும் மாற்றக்கூடாது என்பது விதி. அப்படி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்ஸும் கடந்த 2021 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 2026 வரை இருக்கும். இந்த தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கீழ் மட்டங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தொண்டர்கள் தேர்வு செய்ததை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. அதனை யாராலும் மாற்ற முடியாது.

நரித்தனம்
ஓபிஎஸ் மா.செக்கள் கூட்டத்தை நடத்துவதால், திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். உங்கள் வீட்டுக்கு நான் கொண்டு போய் வீட்டு வரி செலுத்தினாலும் வாங்கிக் கொள்வார்கள், அது போலத்தான் இது. அந்த வரவு செலவு அறிக்கையை தயார் செய்ததே ஓபிஎஸ் தான். அதைச் சொல்லாமல், நேரம் பார்த்துக் காத்திருந்து மாசெக்கள் கூட்டம் நடைபெறும் அன்றைக்கு சூழ்ச்சி செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி நடத்துவதெல்லாம் நரித்தனம், சூழ்ச்சி, நயவஞ்சகம்.

ஜெயலலிதாவே நம்பிய ஒருவர்
ஜெயலலிதா யாரையும் நம்பமாட்டார் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒருவரை மட்டும் நம்பினார். அவர் ஓபிஎஸ். என்றைக்காவது ஓபிஎஸ்ஸுக்கு கொடுத்த பதவியை விட்டு நீக்கினாரா? தனக்குச் சோதனை வரும்போதெல்லாம் முதல்வர் கிரீடத்தையும் ஓபிஎஸ் தலையில் தான் வைத்தார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி எங்கு இருந்தார்? இடைச்செருகலாக வந்து சேர்ந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. இன்று ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குகிறார் ஈபிஎஸ்.

பிளவு ஏற்பட்டால் அதிமுக வென்றதில்லை
என்றைக்காவது அதிமுக பிளவு பட்டிருக்கும்போது திமுகவை வீழ்த்தியதாக வரலாறு உண்டா? சிறியதோ, பெரியதோ எப்போதெல்லாம் அதிமுக பிரிந்து நிற்கிறதோ, அப்போதெல்லாம் திமுகவுக்கு அது வாய்ப்பாக மாறுகிறது. அந்த வாய்ப்பை தொடர்ந்து உருவாக்குகிறார் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது இந்தக் கட்சி தானே? அந்தக் கட்சியை அபகரிக்க மாட்டேன் எனச் சொல்வாரா எடப்பாடி பழனிசாமி? தொண்டன் கூட தலைமை பதவிகு வரலாம் என்ற விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் முன்மொழியவேண்டும் எனக் கொண்டு வந்து தொண்டர்களுக்கு துரோகம் செய்யலாமா? கட்சி விதிகள் என்ன வைத்துக் கொள்வதற்கும், மழிப்பதற்கும் தாடி மீசையா?

வெடித்துக் கிளம்பிவிட்டார்
ஒரு தொண்டன் கூட கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரலாம் என்பதற்கு நான் சாட்சி என்று பேசுவார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்படி வரக்கூடிய விதியைத்தான் எடப்பாடி திருத்திவிட்டார். இதுதான் பித்தலாட்ட அரசியல். மேடைக்கு மேடை பொய்களைப் பேசுவார் எடப்பாடி. ஆனால், ஓபிஎஸ் ஒருபோதும் அரசியலுக்காக பொய் பேசியதில்லை. புகைந்து கொண்டிருந்த எரிமலை, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்துவிட்டது. நாங்கள் எல்லாம் காட்டமாகப் பேசினாலும் அமைதியாக இருந்த அவர் வெடித்துக் கிளம்பிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார் மருது அழகுராஜ்.












Click it and Unblock the Notifications