தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!
மதுரை: அதிமுக பாதிப்புக்கு காரணமானவர்கள் திருத்தி கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் தாயுள்ளத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், நித்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக இரு அணியாகப் பிரிந்தது.

இதனால் மகேந்திரன் சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகிலேயே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மரியாதை செய்தார்.
இவரது குடும்பத்தினருக்கு கட்சித் தலைமை சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் என ரூ.55 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி கட்சியினர் யாரும் இதேபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகிக்கு மதுரையில் செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுக மிகப்பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு காரணமானவர்கள் யாராலும் இருந்தாலும், அதனை உணர்ந்து திருத்தி கொள்ள வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தாயுள்ளத்தோடு நடந்து கொண்டார்களோ, அப்படி ஒவ்வொரு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். என்ன நோக்கத்திற்காக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications