“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு
சென்னை: "தேர்தல் பிரச்சாரங்களில் தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்." என திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரப் பேச்சுகள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.

தனது பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குறித்தும் கண்ணியம் குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மன அழுத்தத்தால் தான் எடப்பாடி பழனிசாமி இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளனர்.
கனிமொழி சோமு பேசும்போது, "ஒரு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியிருந்தால் ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என சொல்லலாம். ஆனால் கூட்டத்திற்கு கூட்டம் இதைப்போல தான் தொடர்ந்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. துணை முதலமைச்சரை தொடர்ந்து அவர் விமர்சித்து வருவதால் தான் அதே பெயரை நாங்கள் அவருக்கு திருப்பி கொடுத்துவிட்டோம்.
அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அவருக்கு திருப்பி கிடைக்கும். பரப்புரையில் அரசியல் குறித்து பேச வேண்டும். மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் ? தங்களது ஆட்சியில் என்னென்ன நல்ல விஷயங்கள் செய்தோம் என்பதை கூறி தான் பரப்புரை செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியெல்லாம் பேசவில்லை. ஏனென்றால் அவர்களின் ஆட்சியில் குற்றங்கள் தான் நடந்ததே தவிர நல்ல விஷயங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை.
அதனால் தான் அதைப்பற்றி பேசாமல் இப்படி தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். அவர்களின் ஆட்சி காலத்தில் மத்தியில் இருந்து பாஜக, அதிமுகவை செயல்படுத்தி வந்தனர். எனவே தான் முதலமைச்சர் இந்த தேர்தல் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் போர். இதில் தமிழகம் வென்றே தீர வேண்டும் என சொல்கிறார். மேலும் எடப்பாடி பழனிசாமி எங்கே மூன்றாவதாகப் போய்விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடம் கூட அவருக்கு கிடைக்காது என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். அந்த பயத்தினால் தான் மன அழுத்தத்தில் இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவரது மனநிலையை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்" எனக் கடுமையாக சாடியுள்ளார் கனிமொழி சோமு.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு எல்லாம் தேர்தல் மூலமாக தமிழ்நாட்டு பெண்கள் பதிலடி தருவார்கள். எடப்பாடி பழனிச்சாமி எங்கே தான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார் கனிமொழி சோமு.
திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில், "தேர்தல் களத்தில் ஒரு பெண்ணை அவதூறாக பேசினாலும் ஒட்டுமொத்த பெண்களையும் பேசுவது போல்தான். கனிமொழி குறித்த அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம். தேர்தலில் 2 ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கு சென்று விடுவோமோ என்ற டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார் இபிஎஸ். தோல்வி பயத்தின் காரணமாக மூன்றாம் தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications