லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 13ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் பிரிந்த பிறகு, பழனிசாமி தரப்பினரின் ஏற்பாட்டில் கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு மற்றும் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி சட்ட விதிகளின் திருத்தங்கள் ஏற்கப்பட்டதாக அதிமுக தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து கடந்த மே மாதம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் சேர்க்கை, கர்நாடக தேர்தல், டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ராயப்பேட்டையில் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் இணைந்து வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று பேசினர். துரோகிகளையும் தீய சக்திகளையும் அகற்றி விட்டு அதிமுக ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று பேசினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்தார். அதிமுகவும், அமமுகவும் இணைந்து செயல்படும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
இந்த நிலையில் லோக்சபா தேர்தல் இன்னும் 10 மாதங்கள் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications