எட்டு அடி பாயும் எடப்பாடி.. ஆந்திரா டூ அந்தமான் வரை! மதுரை மாநாட்டை தொடர்ந்து புது அசைன்மெண்ட்
சென்னை: ஆந்திரா முதல் அந்தமான் வரை அண்ணா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அதிமுகவினருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள் : செப்டம்பர் 15, 16, 17 & 19

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2023, 16.9.2023, 17.9.2023 மற்றும் 19.9.2023 ஆகிய நான்கு நாட்கள், 'பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா" நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15.9.2023 அன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications