பேனரால் கடுங்கோபம்.. எடப்பாடி பழனிச்சாமியை சீண்டுகிறதா ஓபிஎஸ் குடும்பம்?.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸின் இளையமகன் ஜெயபிரதீப்பிற்கு பேனர் வைத்திருந்ததை கண்டு கோபமடைந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளரை கடிந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப்பை வரவேற்று போஸ்டர்கள் அடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவருக்கு எதற்கு இத்தனை வரவேற்பு என கேட்டு அந்த மாவட்டச் செயலாளரை அழைத்து கடுமையாக கண்டித்ததாக தெரிகிறது.

இணை ஒருங்கிணைப்பாளர்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தகவல்கள் வலம் வருகின்றன. ஏற்கெனவே அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பதால் யாருக்கு செல்வாக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை தலைமை
இரட்டை தலைமைகள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருவரும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதால் நடுநிலையில் உள்ளவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஓபிஎஸ்
இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் கை ஓங்கியிருப்பதை தடுக்க எடப்பாடி பழனிச்சாமி பல முட்டுக்கட்டைகளை போடுவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைத்த போது அதிமுகவை சேர்ந்த ஒரு எம்பிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

தேனி எம்பி
ஆனால் அதிமுகவில் போட்டியிட்டவர்களில் தேனி எம்பி ரவீந்திரநாத்தை தவிர மற்ற அனைவருமே தோல்வி அடைந்தனர். அன்று முதலே இரட்டை தலைமைக்குள் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. அதாவது ஓபிஎஸ் அவரது மகனை மட்டுமே ஜெயிக்க வைத்துவிட்டு மற்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு உதவவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததாக சொல்லப்பட்டது.

சீட் கொடுப்பது
அது சட்டசபை தேர்தலின் போது கட்சியினருக்கு சீட் கொடுப்பதில் மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் என பாரபட்சம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. மேலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பியான ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சரவை பதவி கொடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி டெல்லி தலைமையிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் தனது மகன் அமைச்சரவையில் ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த ஓபிஎஸ்ஸுற்கு ஏமாற்றம் எழுந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
அது போல் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளையும் மேற்கு மண்டலத்தினரே ஆக்கிரமித்தது ஓபிஎஸ்ஸுக்கு ஒரு வித அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே சொல்லப்பட்டது. சசிகலாவை எதிரியாக பாவிக்கும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா, சசிகலாவை திருச்செந்தூரில் சென்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஓபிஎஸ் தம்பி என்றும் பாராமல் ஓ ராஜாவை நீக்க வேண்டும் என போர்க் கொடி உயர்ந்ததை அடுத்து ராஜா நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயபிரதீப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகளை எல்லாம் ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.

சசிகலா ஆதரவு
ஆனால் இதுகுறித்து அரசியல் நோக்காளர்கள் கூறுகையில் ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிச்சாமி சீண்டவில்லை. மாறாக ஓபிஎஸ் குடும்பத்தினர்தான் எடப்பாடி பழனிச்சாமியை சீண்டி வருகிறார்கள். ஓபிஎஸ்ஸின் குடும்பத்தில் உள்ள சிலர் சசிகலாவுக்கு ஆதரவானவர்கள். இவ்வளவு ஏன் ஓபிஎஸ்ஸே இரு முறை சசிகலாவுக்கு ஆதரவாக பேசி கட்சியில் எதிர்ப்பை சந்தித்தாரே. கட்சியில் இல்லாத ஒருவருக்கு எதற்காக பேனர் வைக்க வேண்டும். எனவே எடப்பாடி பழனிச்சாமியைதான் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அவரது குடும்பத்தினரும் சீண்டுகிறார்கள் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications