அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்! பிடி கொடுக்காத எடப்பாடி! சீறிய செங்கோட்டையன்! கவனிக்கும் டெல்லி
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு இன்னும் 24 மணி நேரத்தில் முடிவடைய உள்ள
நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.
கடந்த வாரம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பழனிசாமிக்கு அவர் காலக்கெடு விதித்திருந்தார்.

செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009-ஆம் ஆண்டு ஜெயலலிதாவே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிலிருந்து நீக்கினார் என்று செங்கோட்டையன் ஆவேசமாக பதிலளித்தார். தனது கெடு குறித்து விளக்கமளித்த அவர், "பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால்,
அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்" என்று
திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும், "தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்" என்று கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் உறுதியாகத் தெரிவித்தார். "அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர
வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் எடப்பாடி மோதல்
"2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024-இல் 30 இடங்களில் வென்றிருப்போம். வேலுமணி கூட இதை சுட்டிக்காட்டினார்" என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார். "கழகம் தொய்வடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும்
சேர்க்க வேண்டும், 'மறப்போம், மன்னிப்போம்' என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை" என்றும் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நெருங்குவதால், பிரிந்து சென்றவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். அவ்வாறு
சேர்க்கப்படாவிட்டால் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆறு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி
"ஆறு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தினோம். ஆனால், அவர் எதையும் கேட்கத் தயாராக இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்
வெளியேறியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த காலக்கெடு நெருங்கி
வருவதால், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து, பதவிகளைப் பறிக்கக்கூடும் என பேசப்படுகிறது. செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி என்ன
மாதிரியான பதில் நடவடிக்கையை எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மோதல்
இன்னொரு பக்கம், அதிமுகவில் முக்கிய அரசியல் நகர்வாக, மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அவரைப் போல வேறு யாரும் கிளம்பி வர மாட்டார்கள் என்று சில மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம்.
இருப்பினும், அத்தகைய நடவடிக்கையின் அரசியல் மற்றும் ஜாதி ரீதியிலான தாக்கங்களை கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. கட்சி வட்டாரங்களின்படி, செங்கோட்டையனின்
சமீபத்திய செயல்பாடுகள் குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தொடர்ச்சியான செயல்கள் அதிமுகவின் தற்போதைய ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications