ஒன்னு கூடிட்டாங்களே.. மொத்தமாக திமுகவிற்கு எதிராக இறங்கிய.. கோல்டன் டீம்.. அப்போ ஸ்டாலின் முடிவு?
சென்னை; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக - தேமுதிக - பாஜக - பாமக எல்லாம் இங்கே மறைமுக கூட்டணி வைத்து பாமக வேட்பாளரை களமிறக்கி உள்ளனர். எல்லோரும் ஒன்று கூடி திமுகவை மறைமுகமாக எதிர்க்கின்றனர், என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13
தேர்தல் புறக்கணிப்பு; விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் . பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி உள்ளது அதிமுக.
நக்கீரன் பிரகாஷ்: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜக சொல்வதை அதிமுக கேட்டு உள்ளது. பாஜக அழுத்தம் காரணமாக.. டெல்லி தந்த அழுத்தம் காரணமாக இந்த தேர்தலை புறக்கணித்து உள்ளனர். பாமகவை வைத்து சோதனை செய்கிறார்கள். பாமக 32 ஆயிரம் வாக்குகள் வாங்கி உள்ளது.
வன்னியர்களை முன்னிறுத்துவோம். அதை வைத்து விக்கிரவாண்டியில் வெல்வோம் என்று பாமக கூறி வருகிறது. இதை பயன்படுத்தி எப்படியாவது விக்கிரவாண்டியில் வெல்லலாம் என்று பாமக நினைக்கிறது. அதிமுக வாக்குகள் தங்கள் பக்கம் வரும். எடப்பாடிக்கு தோல்வி பயம்.
அதிமுகவும் பாமகவும் சேர்ந்து கூட்டணி அமைத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்பே போட்டியிட்டு இருக்கிறார்கள். இது இரண்டாவது இடைத்தேர்தல். இதில் அதிமுகவும் பாமகவும் சேர்ந்து கூட்டணி அமைத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் முந்தைய தேர்தலில் வென்றது போல வெல்லலாம். முன்பு நடந்த இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இதே தொகுதியில் பாமக - அதிமுக வென்றது.
ஆனால் இந்த முறைசெய்யவில்லை. மாறாக அதிமுக - தேமுதிக - பாஜக - பாமக எல்லாம் இங்கே மறைமுக கூட்டணி வைத்து பாமக வேட்பாளரை களமிறக்கி உள்ளனர். எல்லோரும் ஒன்று கூடி திமுகவை மறைமுகமாக எதிர்க்கின்றனர், என்று நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications