நேரம் ஒதுக்காத மோடி.. நாள் குறித்த எடப்பாடி! இனிதான் “ஆக்ஷன்” - ஜெயக்குமார் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்று ஓய்வுபெற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந் மற்றும் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இரவு விருந்தையும் அளித்தார்.

முக்கிய பிரமுகர்கள்
இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எடப்பாடி, அண்ணாமலை பங்கேற்பு
இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தவிர்த்து, பிற மாநில பாஜக தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை டெல்லி சென்றது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பூசல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காகவே என்று பேசப்படுகிறது.

சென்னை திரும்பிய எடப்பாடி
இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும், இடைபட்ட நேரத்தில் அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் விவாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த சூழலில் பிரதமரை சந்திக்காமல் நேற்றே சென்னைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

ஜெயக்குமார் விளக்கம்
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக அலுவல் வேலை இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்துள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல், நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. வாய்ப்பு கேட்டு மறுக்கப்படுவதாக கூறுவது தவறான தகவல்.
Recommended Video

பிரதமரை சந்திக்க முடிவு
பிரதமர் சென்னை வரும் போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அவரை சந்தித்து பேசுவோம். அதிமுக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்குவார். ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்." என்றார். பிரதமர் மோடி சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ஜூலை 28 ஆம் தேதி சென்னை வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்,












Click it and Unblock the Notifications