சிக்ஸர் விளாசிய தேர்தல் கணிப்பு.. கோட்டை விடுகிறாரா எடப்பாடி பழனிசாமி.. இப்பவே பொருமல்கள் கேட்குதே?
சென்னை: எக்ஸிட் போல் முடிவுகள், அதிமுகவுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.. என்னாச்சு?
இந்த முறை லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் திமுகவே வெற்றி பெறும் என்று குத்துமதிப்பாக கணிக்கப்பட்டு வந்தது.. அதுபோலவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் திமுகவே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

மத்தியில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணியே பிரதான வெற்றி பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் 3வது இடத்தையே இந்தியா கூட்டணி பெறும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக: இந்த கணிப்புகள் வெளியானதிலிருந்தே, அதிமுக கலங்கிப்போயுள்ளதாக சொல்கிறார்கள். காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இந்த முறையும், அதிமுகவின் கூட்டணியானது பலவீனமாகவே கருதப்படுகிறது..
கடைசிவரை பாமக எப்படியாவது கூட்டணிக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து, அதிமுகவுக்கு ஷாக் தந்தது பாமக. எனவே, அதிமுகவுடன் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி வைத்து போட்டியிட்டன.. இதனால், அதிமுகவுக்கு தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் என்றே தொண்டர்கள் கருதினாலும், வெளியான எக்ஸிட் போல்கள் என்னமோ, அதிமுகவுக்கு சறுக்கலை தந்துவிட்டது.
கணிப்புகள்: இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு வெறும் 6 முதல் 8 இடங்களும், சிஎன்என்நியூஸ் 18 கருத்து கணிப்பில் 2 இடங்களிலும், தந்தி டிவி கருத்துக்கணிப்பில் 2 இடங்களிலும், வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு கணிப்புகளின்படியும் பார்த்தால், அதிமுகவுக்கு அதிகபட்சம் 8 இடங்கள், குறைந்த பட்சம் 2 தொகுதிதான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... குறிப்பாக, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமான களமாக கருதப்படுகிறது.
போல்கள்: இப்படியொரு எக்ஸிட் போல்களை கண்டு அதிமுக அதிர்ந்துபோயுள்ளதாம்.. ரத்தத்தின் ரத்தங்களும் மிகவும் கவலையில் உள்ளார்களாம்.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தமிழக அரசியலை தீர்மானித்த கட்சியா இப்படி ஒற்றை இலக்க எண்களை பெற்றுள்ளது என்று கலங்கி போயுள்ளார்களாம்.
இதெல்லாம், வெறும் கருத்து கணிப்புகள் என்றே வைத்து கொண்டாலும், இதற்கு முன்பு வெளியான எக்ஸிட் போல்களில்கூட, இந்த அளவுக்கு குறைவான இலக்கம் வெளியானதில்லையாம்.
கோட்டை: இந்த முறை தேர்தலின்போது, தனிநபராகவே எடப்பாடி பழனிசாமி போராடினாலும், ஊர் ஊராக சென்று கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டாலும், கூட்டணி விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாரோ? என்றே இப்போதே முனகல்கள் கேட்க துவங்கியிருக்கிறதாம்.
என்ன இருந்தாலும், அதிமுகவை 4 அணியாக பிரிய விட்டிருக்கக்கூடாது, இப்போதாவது எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிடிவாதத்தை மாற்றி கொள்ள வேண்டும், அப்போதுதான் அதிமுகவின் வருங்காலத்தை காப்பாற்ற முடியும் என்றும் முணுமுணுப்புகள் வெடிக்க துவங்கியிருக்கிறதாம்.
ஒருவேளை, எக்ஸிட் போல்களில் வெளியானதுபோலவே, வாக்கு எண்ணிக்கையின்போதும், இதேபோன்ற ரிசல்ட் வெளியானால், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்வார்?என்றும் கேள்விகள் எழ துவங்கியிருக்கிறதாம்.
சலசலப்புகள்: இப்படி சலசலப்புகள் பலவிருந்தாலும் அதிமுக பெருத்த நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்லாம்ல, "கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கனத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதால், தேர்தல் ரிசல்ட்டை நோக்கி மொத்த பேரின் கவனமும் குவிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications