பாஜக போடும் "லாப கணக்கு"! எடப்பாடி, ஓபிஎஸ்ஸில் டெல்லி சப்போர்ட் யாருக்கு? உடைக்கும் அரசியல் வல்லுனர்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக தரப்பு யார் பக்கம் நிற்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொள்ளும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்தில் இரண்டு தரப்புமே முறையிட்டுள்ளது.
நான்தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி முறையிட்டுள்ளார். அதே சமயம் இந்த பொதுக்குழுவே செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் டெல்லியில் முறையிட்டுள்ளார்.

சசிகலா பாஜக
இந்த நிலையில் எடப்பாடி - ஓபிஎஸ் மோதலில் பாஜக தரப்பு யார் பக்கம் நிற்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் எதிர்காலத்தில் சேர்ந்த செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். முன்னதாக சசிகலா பிரச்சனையில் சசிகலாவை முடக்கும் வகையிலேயே பாஜக செயல்பட்டது. சசிகலா பதவி ஏற்பு விழாவிற்கு ஆளுநர் வரவில்லை. ஆளுநர் அப்போது பதவி ஏற்பு விழாவிற்கு வர மாட்டார் என்று நினைத்தோம். அதேபோல் அவர் வரவில்லை.

சசிகலா எதிர்ப்பு
அதேபோல் ஆகஸ்ட் 15ம் தேதி சசிகலா விடுதலை என்று சொன்னார்கள் அது நடக்கவில்லை. அதேபோல் பாஜக - சசிகலா கூட்டணி நடக்கும் என்று சொன்னார்கள் அதுவும் நடக்கவில்லை. சசிகலாவை பாஜக விரும்பவில்லை என்று தெளிவாக தெரிகிறது. எவ்வளவு பலமாக இருந்தாலும் சசிகலா வேண்டாம் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. அதேபோல்தான் இப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் விவகாரத்திலும் தங்களுக்கான அரசியல் லாபம் என்ன என்று பாஜக பார்க்கும்.

லாபம் இல்லை
இப்போது இவர்கள் மோதல் காரணமாக பாஜகவிற்கு பெரிதாக லாபம் கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 1 இடத்தில மட்டுமே வென்றது. சட்டசபை தேர்தலில் 70+ இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணி வென்றது. இது பாஜகவிற்கு ஒரு நம்பிக்கை சூழலை உருவாக்கியது. ஆனால் அந்த கெமிஸ்ட்ரியை பாமக கெடுத்துவிட்டது. முதல்வர் ஸ்டாலினுடன் பாமக நல்ல உறவை பேணி வருகிறார்கள். பாமக இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

பஞ்சாயத்து
பாஜகவோ தாங்கள்தான் பெரிய கட்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முடிந்த அளவு இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பாஜக பார்க்கும். இதில் பாஜக பஞ்சாயத்து செய்வது கஷ்டமான விஷயம்தான். ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக தங்களுடன் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கும்.
பாஜக
இவர்கள் உடையாமல் இருக்க வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கும். அப்படி இருந்தால்தான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு 5-6 இடங்களாவது அடுத்த லோக்சபா தேர்தலில் கிடைக்கும். இவர்கள் ஒற்றுமையாக வலுவாக இருந்தால்தான் கூட்டணி வெற்றிபெறும். அதற்காகவே பாஜக இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கும். ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து இருந்தால் அது பல மாவட்டங்களில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவரின் விருப்பத்தையும் பாஜக நிறைவேற்றி, அவர்களை ஒன்று சேர வைப்பது என்பது கடினம் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications