சிறுபான்மையினரின் ரியல் காவலன் நாங்கள்தான்! கிறிஸ்துமஸ் பெருவிழாவில்.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சென்னை: அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினரைக் காக்கக் கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.
அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

எடப்பாடி பழனிசாமி
இந்ச நிகழ்ச்சியில் பேசிய அவர், "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றவர் இயேசு. அவரது பிறப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அல்ல.. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது... அனைத்து சமுதாயமும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றவர் இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களைப் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்தவர் எம்ஜிஆர் என்பதைத் தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது.. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இன்று வரை கிறிஸ்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஜெயலலிதா
கிறிஸ்துமஸ் தின விழா என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. உலகில் அனைவருக்கும் மகிழ்வான நாளாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களின் நலன் கருதிக் கொண்டு வரப்பட்ட நன்மைகள் ஏராளம். எந்தவொரு நாடும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்குக் கல்வி அவசியம்... அப்படி கல்விக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை இனிமேல் எந்தவொரு அரசாலும் கொண்டு வர முடியாது.

பல்வேறு திட்டங்கள்
ஏழை மக்களுக்கு உதவ பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். தாலிக்குத் தங்கம், முதியோர் உதவித்தொகை என அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மூலம் சுமார் 90% முதியோர்கள் பயனடைந்தனர்.. அதிமுக ஆட்சியில் ஏழை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை வேறு எந்தவொரு அரசாலும் கொண்டு வர முடியாது.

சிறுபான்மையினர்
கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் சென்று வர நிதி உதவி அளித்தவர் ஜெயலலிதா.. பென்னிகுயிக் மணிமண்டபம் திறந்து வைத்தவர் ஜெயலலிதா.. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா.. சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியவர் ஜெயலலிதா.. சிறுபான்மை மக்களின் நலனைப் பாதுகாத்தவர் ஜெயலலிதா... கிறிஸ்தவர்களுக்கும் அதிமுகவினருக்கும் உள்ள பாசப்பிணைப்பு வருங்காலத்திலும் தொடரும்...

அதிமுக அரசு
வாழ்க்கையில் நிறையக் கஷ்டங்கள் களைகள் போல இருந்தாலும் பொறுமையுடன் அதைக் களைந்து வெற்றி பெற வேண்டும்.. அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் உயரப் பாடுபட்ட ஒரு அரசு அதிமுக அரசு.. எப்போதுமே சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரு கட்சி அதிமுக" என்று அவர் பேசினார்.

ஜெயக்குமார்
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே சிறுபான்மையின மக்களின் எண்ணமாக உள்ளது.. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு முழுமையாக இருந்தது. .ஆனால் திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை.. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் அதிமுக கூட்டணிக்குத் தான் வாக்களிப்பார்கள் என்பது நிச்சயம்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது..

ஓபிஎஸ் மீது அட்டாக்
இங்கு இடி அமின் ஆட்சியை விட மோசமான ஆட்சி நடக்கிறது.. குண்டர்களை நம்பி இருக்கும் கட்சிதான் திமுக.. கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்துக்குரியது.. இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவோம்.. இறுதியாகப் பன்னீர்செல்வம் குழுவில் நான்கு பேர் மட்டுமே உள்ளனர். நாங்கள் கோடிக்கணக்கான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்துவதே வீண்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications