100 யூனிட் இலவச மின்சாரம்! ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் சீரழிப்பீங்களா? வெகுண்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை: 100 யூனிட் விலையில்லா மின்சாரம் திட்டம் தொடர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: ஏழை எளிய நடுத்தர வாடகைத்தாரர்களுக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டும். மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

இலவச மின்சார திட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த நிலையே தற்போதும் தொடர வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்சார வாரியம் சீரழிவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ 1.75 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை.
101- 200 யூனிட்கள் வரை ரூ 225, 201- 300 யூனிட்டுகள் வகை ரூ 675 ரூபாயும் என ஒவ்வொருவருக்கும் கட்டணம் எகிறியது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு வணிக இணைப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தச் சூழலில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாக சமூகவலைதளங்களில் போலியான தகவல் பரவியது. அதில் ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கும் போது அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் கிடைத்தது. சமூகவலைதளங்களில் இந்த தகவல் தீயாய் பரவிய நிலையில் இந்த விஷயம் மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து தகவல் உண்மைக்கு புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்தது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சமூக வலைதளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால், மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது" என மின்சார வாரியத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications