அதிர்ந்து போன சேலம் அதிமுக! விசாரணை வளையத்தில் இருந்தவரை.. பிடித்து அழைத்து! ப்பா.. இதுதான் எடப்பாடி
சென்னை: அதிமுக கட்சியில் அமைப்பு ரீதியான 41 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட மூவ் பெரிய கவனம் பெற்றுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்.. புதிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக மாவட்ட செயலாளர்கள் சிலர், மற்ற நிர்வாகிகள் பலர் இந்த தேர்தலுக்கு பின் மாற்றப்பட்டு வருகிறார்கள்.
மொத்தம் அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 21ம் தேதி நடந்தது.

அதிமுக தேர்தல்
இந்த முதல் கட்ட தேர்தலுக்கு பின் அதிமுகவில் பல கோஷ்டி மோதல்கள் இருந்தன. இந்த நிலையில் ஏப்ரல் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட தேர்தலின் போது பெரிதாக கோஷ்டி மோதல் இல்லை. இந்த நிலையில்தான் தேர்தலுக்கு பின்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது 41 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பல கோஷ்டி மோதல்
சென்னை மாவட்டங்கள், தூத்துக்குடி, குமரி என்று பல முக்கிய மாவட்டங்களில் உள்ள அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகம் கவனம் ஈர்த்தது சேலம் புறநகர் மாவட்ட நியமனம்தான். சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அட இந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று கூறுகிறீர்களா? ஆம் அந்த இளங்கோவன்தான். கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

இளங்கோவன்
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவராக இருக்கும் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடு தொடர்பாக இவரின் வீட்டின் ஆதாரங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அப்போதே தெரிவித்தது. அதேபோல் இவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான நகைகளும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.

ரைட் ஹேண்ட்
எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹேண்ட் என்று கருதப்படுபவர் இளங்கோவன். சரியாக அவரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது பல விவாதங்களை ஏற்படுத்தியது. கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இளங்கோவன் தரப்பு கையை பிசைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர் விசாரணை வளையத்தில் மட்டுமே இருக்கிறார்.

விசாரணை
வேறு ஒரு முக்கிய புள்ளி இன்னும் சில நாட்களில் விசாரிக்கப்படுவார் என்றும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இளங்கோவனை விசாரணை வளையத்தில் வைத்து உள்ளனர். இப்போதைக்கு விசாரணை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டன. இந்த நிலையில்தான் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கோடநாடு வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு காரணமாக இளங்கோவனிடம் எடப்பாடி நெருக்கம் காட்ட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

விட்டுக்கொடுக்காத எடப்பாடி
விசாரணை வளையத்தில் இருக்கும் இளங்கோவனிடம் நெருங்காமல் ஒதுங்கிக்கொள்ள எடப்பாடி முயல்வார் என்றே கூறப்பட்டது. ஆனால் அப்படி எல்லாம் இளங்கோவனை விடாமல்.. அவரை பிடித்து அழைத்து வந்து சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக நியமித்து இருக்கிறார். இந்த பதவி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த பொறுப்பு ஆகும். அந்த பொறுப்பை இளங்கோவனுக்கு கொடுத்து.. என்னுடைய ஆதரவு அவருக்கு எப்போதும் உள்ளது என்பதை எடப்பாடி சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications