நாங்கதான் தலைமை.. லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை சீட்? அதிமுக முடிவு செய்யும்.. எடப்பாடி அதிரடி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர், ஓபிஎஸ் அணியை மீண்டும் அதிமுகவில் இணைக்கக் கூடாது என்றனர்.
மேலும் பொருட்களில் எப்படி போலி இருக்கிறதோ அது போல் அரசியலில் போலி என்றால் அது ஓபிஎஸ்தான். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள் யாருமே ஓபிஎஸ்ஸுடன் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். கட்சி பணிகளை கிளை முதல் தொடங்குங்கள்.

திமுகவின் பி டீம்
திமுகவின் "பி" டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கடந்த 21 ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது பணத்தை கொடுத்து ஆட்களை கூட்டி வந்து நடத்தப்பட்டது. 18 மாதங்களாக அதிமுக மகிழ்ச்சியாக உள்ளது. கரூரில் அதிமுக நிர்வாகி கடத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையே காட்டுகிறது.

மக்கள் பிரச்சினை
மக்கள் பிரச்சினையில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் மக்களுக்கு நம் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அளவில் அதிமுகவை பலப்படுத்த வேண்டும். அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை. 100 சதவீதம் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என நம் மீது பாஜக திணித்ததில்லை. அதிமுக உள் விவகாரத்தில் பாஜக தலையிட்டதில்லை. எனவே பாஜகவை நிர்வாகிகள் யாரும் அவதூறாக பேச வேண்டாம். என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு நோட்டீஸ்
அதிமுகவின் கட்சிக் கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் நோட்டீஸில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் தனக்கு கட்சிக் கொடியையும் பெயரையும் பயன்படுத்த உரிமை உள்ளது என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக 15 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வர் என்றும் தெரிவித்திருந்தார். இருப்பதே 39 தொகுதிகள்தான். இதில் அதிமுக 25 தொகுதிகளை பாஜகவுக்கு எப்படி விட்டுக் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்தது. அப்படியானால் பாஜக தனித்து போட்டியா என்ற கேள்வியும் எழுந்தது. அதே வேளையில் அதிமுகவிலிருந்து விலகி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என அறிந்துள்ள பாஜக, அதிமுகவிடம் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் சீட்டுகளை பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பெரும்பாலான இடங்களை அதிமுகவுக்கும் சில இடங்களை கூட்டணி கட்சிக்கும் ஒதுக்க முடிவு செய்துள்ளார் என்றே தெரிகிறது. இதை மனதில் வைத்துதான் கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications