பற்றி எரிந்த ரோம்.. ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்! ஸ்டாலினை குத்திக்காட்டிய எடப்பாடி! அதிர்ச்சி வீடியோ
"யாருக்கும் எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது."
சென்னை: ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்ததைபோல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்தாலும் முதலமைச்சரின் காதுகளுக்கு அது எட்டுவதே இல்லை என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் "திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று பட்டப்பகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
யாருக்கும் எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது." என்று பதிவிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடுத்த பதிவில் நீரோ மன்னருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு இருக்கிறார்.

நீரோ மன்னனுடன் ஸ்டாலின் ஒப்பீடு
அதாவது, “ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது.” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
முன்னதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, “2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால கழக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு முறையான ஆட்சி நடைபெற்றது; மக்கள் சுதந்திரமாக நடமாடினர்.

மதுரைக்கு செல்லாத ஸ்டாலின்
2006 முதல் 2011 வரை திமுக தமிழகத்தை ஆட்சி செய்த காலத்திலேயே, மதுரைக்கு சுதந்திரமாக போகக்கூட இயலாத நிலையில் இருந்த தற்போதைய முதலமைச்சர், 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான் மதுரை மண்ணை தைரியமாக மிதித்தார் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஜாதி மோதல் இல்லை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். காவல் துறையில் அரசியல் குறுக்கீடு இல்லை; ஜாதி, மத மோதல்கள் இல்லை; அதிகாரிகள் மிரட்டப்படுவது இல்லை; எனவே, சாதாரண முட்டுச் சந்து முதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வியாபாரம் செய்யும் அனைத்துத் தொழில் முனைவோர்களும் எந்தவித அச்சமுமின்றி தங்கள் தொழிலை செய்து வந்தனர்.

சட்டம் ஒழுங்கு
அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான ஆட்சியிலும், 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பெரிய மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பெற்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் பெருநகரம் என்ற பெருமையை சென்னையும், மற்ற இடங்களை தமிழகத்தின் இதர நகரங்களும் பெற்றன.

ஜார் மன்னன் ஆட்சியால்
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழகத்தில் தற்போது நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளால் அனைவரும் உறைந்து போயுள்ளனர். ஆளும் தி.மு.க-வினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சிக்கு எதிராக திறள்வார்கள்
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், ஆளும் திமுக நிர்வாகிகளின் அராஜகம் போன்றவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்த நிர்வாகத் திறனற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இந்த ஆட்சியாளர்களால் தினமும் பாதிக்கப்படும் காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திரண்டெழுவார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications