கொளுத்திபோட்ட சசிகலா.. வெடித்து சிதறும் நிர்வாகிகள்.. மாறுப்பட்ட கருத்தால் சிக்கலில் அதிமுக!
சென்னை: சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம்.. எடப்பாடி பழனிச்சாமியின் கோபமான பேட்டி.. ஓ. பன்னீர்செல்வமின் அரசியல் சிக்னல் என்று அதிமுக கட்சிக்குள் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக கட்சிக்குள் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.
சசிகலாவின் டெல்டா மற்றும் தென் மாவட்ட அரசியல் பயணங்கள் அதிமுகவில் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா கடந்த சில மாதங்களாக சைலண்ட்டாக இருந்த நிலையில் பூ பாதையில் இருந்து சிங்கப்பாதைக்கு திரும்பிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு புதிய ரூட் பிடித்து பயணித்துக் கொண்டு இருக்கிறார்.
இன்னொரு பக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வமும் இவ்வளவு நாள் அதிமுகவில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருந்துவிட்டு.. இப்போது திடீரென பேட்டை சுழற்றி டி 20 இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். கடந்த மாதம் வரையிலும் கூட அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வமின் சொல்லுக்கு கட்சியில் பெரிய அளவில் மதிப்பு அளிக்கப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்
கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவே இருந்தாலும் முக்கியமான முடிவுகளில் எல்லாம் ஓ. பன்னீர்செல்வமின் குரலுக்கு பெரிதாக மதிப்பளிக்கப்படவில்லை. கட்சியில் அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த கே.பி முனுசாமி போன்ற தலைவர்களே கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிசாமி டீமிற்கு சென்றனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் ஒன்று ஓரம் கட்டப்பட்டனர் இல்லை என்றால் கட்சியில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டனர்.

செவி சாய்க்கவில்லை
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தொடங்கி எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வது வரை எதிலும் பெரிதாக ஓ பன்னீர்செல்வமின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கட்சி முழுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் கொங்கு மண்டல தலைவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்தாலும் அதை வெளியே காட்டிகொள்ளாத நிலைதான் பல அதிமுக தலைவர்கள் மத்தியில் இருந்தது.

காட்சி மாறுகிறது
ஆனால் இப்போதோ ஓபிஎஸ் பேச்சுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சசிகலா குறித்து ஓபிஎஸ் அளித்த பேட்டியில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது, என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இவரின் பேட்டிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஆதரவு
ஓபிஎஸ்ஸுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கி இருந்த ஆர்.பி உதயகுமார் நேரடியாக இந்த முறை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்துள்ளார். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இந்த செய்தியை அடிக்கும் இந்த சமயத்தில் கூட, ஓபிஎஸ் சொன்னதில் தவறு இல்லை. அவர் பேசியதுதான் சரிதான். கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உரிமையில் அவர் அப்படி பேசலாம். அவருக்கு உரிமை உள்ளது என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா பின் திரள்கிறார்கள்
ஓபிஎஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நிர்வாகிகள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். அவரின் பேச்சு அதிமுகவை உலுக்கி உள்ளது. இன்னும் பல நிர்வாகிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சசிகலாவின் வருகைக்கு ஆதரவாக கட்சிக்குள் கிரீன் சிக்னல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி தரப்பில் இருக்கும் பெரிய தலைகள் ஓபிஎஸ் பக்கம் அணி மாறுகிறார்களோ.. ஓபிஎஸ் வழியாக இவர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக அணி திரள்கிறார்களோ என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பி உள்ளது.

தென்மண்டலம்
அதிலும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் சசிகலாவிற்கு முக்குலத்தோர் சாதி ஆதரவும் இதனால் அதிகரித்து வருகிறது. ஓபிஎஸ் - சசிகலா இருவருக்குமான தென் மண்டல ஆதரவு அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது. இதனால்தான் சசிகலாவும் சரியாக குரு பூஜையை குறி வைத்து தென்மண்டல பயணத்தை மேற்கொண்டு உள்ளார். கட்சிக்குள் இதனால் கொங்கு பெல்ட் - தென் மண்டல பெல்ட் மோதல் அதிகரிக்கிறதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.

எடப்பாடி மீதான புகார்
ஓபிஎஸ் - சசிகலா பக்கம் செல்லும் அதிமுக நிர்வாகிகளும் சில நியாயமான காரணங்களை சொல்கிறார்கள். அதில், திமுக அரசு தொடுக்கும் வழக்குகளுக்கு எதிராக இபிஎஸ் எதுவும் செய்யவில்லை. எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் அதிரடியாக எதுவும் செய்யவில்லை. மாறாக கட்சிக்குள்தான் கண்டிப்பு காட்டுகிறார். சசிகலா - ஓபிஎஸ் இருந்திருந்தால் அதிமுக நிர்வாகிகள் பக்கம் நின்று திமுகவை எதிர்த்து இருப்பார்கள்.

ஓபிஎஸ் தரப்பு சொல்லும் நியாயம்
ஆனால் இப்போது கோடநாடு வழக்கு காரணமாக எடப்பாடி பழனிசாமியே அமைதியாக இருக்கிறார். மக்களுக்கும் எதுவும் பெரிதாக செய்யவில்லை.. இப்போது கட்சி நிர்வாகிகள் மீதான ரெய்டையும் தடுக்கவில்லை. சசிகலாவை இபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் சேர்ந்துதான் பொதுச்செயலாளர் ஆக்கினார்கள். சசிகலாதான் இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்கியது.

சசிகலா பயணம்
இப்போது அவர்களே சசிகலா வருகையை எதிர்த்தால் என்ன நியாயம்.. சசிகலா - ஓபிஎஸ் - இபிஎஸ் எல்லோரும் சேர்ந்து இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஓபிஎஸ்ஸின் திடீர் சசிகலா ஆதரவு பேச்சும் சரியான நேரத்திலேயே வந்து இருக்கிறது. சசிகலா அரசியல் பயணம் செல்லும் நேரம் பார்த்து இப்படி அவர் பேசி இருக்கிறார். இரண்டு நாள் பயணத்தில் சசிகலா பல அதிமுக நிர்வாகிகளை சந்தித்துவிட்டார்.

குருபூஜை வரவேற்பு
எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்புதான் சசிகலாவிற்கு கிடைத்துள்ளது. நாளை மதுரையில் 59வது குருபூஜையில் சசிகலா கலந்து கொள்கிறார். இந்த குரு பூஜையில் சசிகலா தனது பலத்தை நிரூபிப்பார். தனது இருக்கும் ஜாதி ரீதியான தென் மண்டல அதிமுக ஆதரவை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தரப்போ.. சசிகலாவிற்கு ஆதரவு எல்லாம் இல்லை.. அதெல்லாம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை என்று கூறி வருகிறது.

டெல்லி மேலிடம்
இன்னொரு பக்கம்.. சசிகலாவின் திடீர் எழுச்சி.. ஓபிஎஸ் பேச்சு எல்லாம் டெல்லி மேலிட ஆதரவு இல்லாமல் நடக்காது என்றும் கூறுகிறார்கள். ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவின் முடிவுகள் எல்லாமே டெல்லி மேலிட கண்காணிப்பில்தான் நடக்கிறது. டெல்லி பாஜக சசிகலாவின் இந்த எழுச்சிக்கு பின்பாகவும் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லையென்றால் திடீரென ஓபிஎஸ் தொடங்கி செல்லூர் ராஜு வரை இப்படி பேச கண்டிப்பாக டெல்லி மேலிடத்தின் கிரீன் சிக்னலும் ஒரு காரணமாக இருக்கும் என்றே கூறுகிறார்கள்.. உண்மையில் என்ன நடக்கிறது.. யார் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த போவது என்று வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications