அதிமுக பொதுக்குழு செல்லும்.. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.. எடப்பாடிதான் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது . உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இந்த தீர்ப்பு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார்.
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

வழக்கு என்ன?
இதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.

என்ன மாற்றம்
அதன்படி அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஆனார். எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தானாக நீக்கப்பட்டது. மீண்டும் அவர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார். அதோடு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேல்முறையீடு
எடப்பாடி தரப்பு இந்த வழக்கில் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தது. முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதில் இரண்டு தரப்பிற்கும் தலா ஒரு மணி நேரம் வாதம் நடத்த நேரம் கொடுக்கப்பட்டது,

வாதம்
ஆனால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சுமார் 3 மணி நேரம் வாதம் செய்தது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் வழக்கில் வாதம் வைத்தது. பொதுக்குழு சட்டப்படியே நடத்தாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில் குறிப்பிட்டது. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி கூட்டியதே செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. பொதுக்குழுவிற்கே அதிக அதிகாரம் உள்ளது என்று எடப்பாடி தரப்பும், தொண்டர்களுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பும் வாதம் வைத்தது.

தீர்ப்பு
இதையடுத்து வாதங்கள் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது . ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications