அவ்வளவுதான்.. டைம் ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் செங்கோட்டையன்.. ஒரு படி கூட இறங்கி வராத எடப்பாடி
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார்.

அதிமுக செங்கோட்டையன்
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை செங்கோட்டையன் ஆவேசமாக சுட்டிக்காட்டினார். தனது காலக்கெடு குறித்து விளக்கமளித்த அவர், "பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்" என்று அறிவித்தார்.
மேலும், "தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்" என கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். "அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி
"2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 2024 ஆம் ஆண்டில் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். முன்னாள் அமைச்சர் வேலுமணி கூட இதை சுட்டிக்காட்டினார்" என்று செங்கோட்டையன் கூறினார். மேலும், "கழகம் தொய்வடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், 'மறப்போம், மன்னிப்போம்' என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை" என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
தேர்தல் நெருங்குவதால், பிரிந்து சென்றவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார். அவ்வாறு சேர்க்கப்படாவிட்டால், அதற்கேற்ற நடவடிக்கைகளை தாம் எடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
"ஆறு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தினோம். ஆனால் அவர் எதையும் கேட்க தயாராக இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். தேர்தலுக்கு முன் வெளியேறியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த காலக்கெடு நெருங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மோதல்
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து, அவரது பதவிகளை பறிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான பதில் நடவடிக்கையை எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு பக்கம், அதிமுகவில் முக்கிய அரசியல் நகர்வாக, மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அவரைப் போல வேறு யாரும் கிளம்பி வர மாட்டார்கள் என்று மூத்த தலைவர்கள் சிலர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அத்தகைய நடவடிக்கையின் அரசியல் மற்றும் ஜாதி ரீதியிலான தாக்கங்களை கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி வட்டாரங்களின்படி, செங்கோட்டையனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தொடர்ச்சியான செயல்கள் அதிமுகவின் தற்போதைய ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications