குற்றவாளியே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டாரே.. அடடே.. எடப்பாடி பழனிச்சாமி பற்றி பிடிஆர் நறுக்
சென்னை: குற்றவாளியே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த ஒரு பேட்டி தொடர்பாக தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து, இன்று தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
அப்போது, அரசு பஸ் போக்குவரத்து கழகம், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக பட்டியல் போட்டு லிஸ்ட் வெளியிட்டார்.

அதிமுக ஆட்சி பற்றி குற்றச்சாட்டு
மேலும், தமிழ்நாட்டில் எவ்வளவு கடன் இருக்கிறது, ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமை என்ன என்பது பற்றி எல்லாம் அவர் விளக்கமளித்தார். அதிமுக ஆட்சி காலங்களில் கடன்களை வாங்கி அவற்றை முதலீடுகளுக்கு பயன்படுத்தாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியது தான் இந்த நிலைமைக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடன் ஒரு அளவுதான் இருக்கனும்
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவ்வாறு கடன் வாங்கிக் கொண்டு சென்றால் கடன் வழங்குவதற்கு தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடும். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் சில துறைகளுக்கு கடன் வழங்குவதற்கு யாரும் முன்வருவது கிடையாது. அது போன்ற நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது. தமிழ்நாடு பணக்கார மாநிலம். இதை சரியாக நிர்வகித்தால் நமது சொத்துக்களை வைத்து நிறைய முன்னேறலாம், என்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மேலும் கூறியதை பாருங்கள்.

வீண் விரையம்
அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட தவறான செலவுகள் காரணமாக ஒரு லட்சம் கோடி அளவுக்கு வீண் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. வரக்கூடிய நிதி எங்கே சென்று சேர்கிறது என்று தெரியாத அளவுக்கு நிறைய ஓட்டை உடைசல்கள் இருக்கின்றன. கடந்த ஏழு வருடங்களாக செய்யப்பட்ட மிகப்பெரிய தவறுகள் இவையாகும். அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி காலத்தில் இதை சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பிடிஆர்
இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தபோது, நிருபர் ஒருவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை குறிப்பிட்டு, ஒரு கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடன்களில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாரே என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த தியாகராஜன், வாங்கும் கடன் முழுக்க முழுக்க புதிய முதலீடுகளுக்கு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். முதலீடுகளுக்கு செய்யப்படும் கடன்கள் பிரச்சினையை தராது. ஏனென்றால் ஒரு பாலம் அமைப்பதோ, குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது போன்றவற்றின் மூலமாக பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் ஒரு ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதில் 50 பைசா மட்டும் தான் வளர்ச்சி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்று ஒருவர் ஒப்புக் கொண்டார் என்றால் அவர் செய்த தவறை அவரே ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம்.

பாராட்ட வேண்டும்
நான் இதற்கு மேல் அவரை எப்படி பாராட்ட முடியும்.. குற்றவாளியே தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமானது தான் இது. அவர் இதை ஒப்புக் கொண்டதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள்
நிதி துறை அமைச்சர் தனது பேட்டியில் மேலும் கூறுகையில், தமிழகத்தின் நிதி நிலைமையை மோசமாக சிதைத்து வைத்திருக்கிறார்கள் . ஒரு பக்கம் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றும் அதே நேரம், இந்த ஓட்டை உடைசல் பிரச்சனைகளை சரிசெய்ய புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர தேவை இருக்கிறது. அதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications