தேமுதிகவின் "14" சென்டிமென்ட்.. புலம்பிய எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மா.செ. கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: தேமுதிக கேட்கும் 14 தொகுதிகளை ஒதுக்க முடியாததால் இழுபறி நீடித்து வருவதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேமுதிக உடனான கூட்டணி தொடர்பாக விரைவில் நல்ல முடிவு தெரிந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கூறிய நிலையில், ஆட்சி அமைக்க தேவையான எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நிலைப்பாட்டை தேமுதிக இதுவரை அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். திமுக தரப்பில் 6 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்படும் என்றும், அதிமுக தரப்பில் 8 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் சென்டிமென்ட்
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் பிரேமலதா விஜயகாந்த் ஒரு சென்டிமென்ட்டை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. அதாவது 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்ற போது 41 தொகுதிகளில் போட்டியிட்டது.
தேமுதிக வரலாறு
அதேபோல் 2016ல் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய போது 104 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்படி கூட்டல் செய்தால் "5" என்ற எண் வர வேண்டும் என்ற செண்டிமெண்ட்டை பின்பற்றி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலின் போது கூட தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிடமும் 14 தொகுதிகளை தேமுதிக கோரி வருகிறது.
அதிமுகவினர் கோரிக்கை
இதனால் இரு தரப்பும் என்ன முடிவு எடுக்கலாம் என்று குழம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று சில மாவட்டச் செயலாளர்கள் கோரி இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான எந்த வாய்ப்பையும் நாம் இழக்க மாட்டோம். தேமுதிக கேட்கும் 14 தொகுதிகளை ஒதுக்க முடியாததால், கூட்டணி முடிவில் இழுபறி நீடித்து வருகிறது. விரைவில் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு தெரிந்துவிடும். ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பணிகளை இணைந்து செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications