கலைஞர் நினைவு பூங்கா..திமுக ஆட்சியில் அந்தரத்தில் மக்கள்! இதுக்கா 650 ரூபாய்! எகிறி அடித்த எடப்பாடி
சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா ஜிப் லைனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிடங்களுக்கு மேலாக இரண்டு பெண்கள் அந்தரத்தில் தவித்து வந்த நிலையில், பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். தொடர்ந்து பூங்காவில் உள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த பூங்காவில், உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளம் உடைய 'ஜிப்லைன்' (கயிற்றில் தொங்கி செல்லும் சாகசம்), பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை உள்ளிட்டவை கட்டணத்துடன் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்காவில் உள்ள ஜிப் லைனில் திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜிப் லைனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அந்தரத்தில் தவித்தனர். தொடர்ந்து கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்ற போதும் ஜிப் லைன் செயல்படவில்லை. இதை அடுத்து அந்த பெண்கள் அலறிய நிலையில் கயிறு கட்டப்பட்டு அவர்கள் இழுத்து மீட்கப்பட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications