3 கட்சிகளுக்கு கூட்டணி கதவை மூடிய எடப்பாடி பழனிசாமி.. அதிமுக போடும் கணக்கு.. திமுகவுக்கு லாபம்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக மற்றும் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்துள்ளதன் மூலமாக, அந்த கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கதவுகளை மூடிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தரப்பில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. அதற்கேற்ப முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
2010ல் இப்படிதான் ஜெயலலிதா மண்டல வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி ஆட்சியை பிடித்தார். அதனையே எடப்பாடி பழனிசாமி மக்களை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணமாக தொடங்கி இருக்கிறார். தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை கூட செலுத்தாமல், அதிமுக தலைவர்கள் தொடங்கி இருப்பது அக்கட்சியினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதேபோல் அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியதும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2வது நாள் சுற்றுப்பயணத்திலேயே திமுக மீதான விமர்சனங்களை முன் வைக்காமல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்க தொடங்கிவிட்டார்.
கூட்டணி மீது அட்டாக்
அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்வதற்கு திருமாவளவன் யார் என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறதா என்று கேள்வி அவர்களையும் வம்புக்கு இழுத்துள்ளார். இத்தனை மாதங்களாக திமுகவை தவிர்த்து அதன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுடன் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவினரும் பேசி வந்தனர்.
கதவுகளை மூடிய அதிமுக
ஆனால் சுற்றுப்பயணத்தின் 2வது நாளிலேயே விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்துள்ளார். இதன் மூலமாக இந்த கட்சிகளுக்கான கூட்டணி கதவுகளையும் எடப்பாடி பழனிசாமி மூடிவிட்டதாக பார்க்கப்படுகிறது. தற்போது மீண்டும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
திமுகவுக்கு லாபம்
எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு திமுகவுக்கு கூடுதல் லாபத்தையே கொடுப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வரலாம் என்று சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறக் கூடும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இப்போதே திமுக கூட்டணி கட்சிகளை அட்டாக் செய்திருப்பதால், அந்த கட்சிகளும் அதிமுக பக்கம் வருவதற்கு தயக்கம் காட்டும் நிலையை உருவாக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications