"அமித் ஷாவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான்”.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி அட்டாக்!
சென்னை: "அரசியலில் முரட்டு தொண்டர்களை பார்த்திருப்பீர்கள். அமித் ஷாவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி தான். அமித் ஷாவின் அடிமைகள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்" என சென்னை திருவற்றியூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூரில் நேற்று நடந்தது. திமுக சென்னை வடக்கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள், கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "உலக வரலாற்றில் தாய்மொழியை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மட்டுமே உண்டு. அவர்களின் தியாகங்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் வருடந்தோறும் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு இளைஞரணியால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் 200 சிறந்த பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மெருகேற்றப்பட்டு இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டங்களில் பேசிய பெருமையோடு இந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிற மாநிலங்கள் பாராட்டுகின்றன. மொழி உரிமை என வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டாக உள்ளது. அதனால் தான் பாஜக போன்ற பாசிச கட்சிகளுக்கு தமிழகத்தை பார்த்தாலோ, தமிழக மக்களை பார்த்தாலோ, முதலமைச்சரை பார்த்தாலோ கோபம் வருகின்றன.
புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. இதுவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தால் பாஜக குட்டிக்கரணம் போட சொன்னாலும் போடுவார். ஹரியானா, பீகார், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இந்தி புகுந்து அவர்களது தாய்மொழி காணாமல் போய்விட்டது. பல தாய்மொழிகளை விழுங்கிய மொழி இந்தி மொழி. அதனால் தான் தமிழக முதல்வர் எப்போதும் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறார்.
இது பெரியார் மூட்டிய நெருப்பு, அண்ணா - கலைஞர் வளர்த்தெடுத்த நெருப்பு. அந்த நெருப்பு கடைசி தமிழன் இருக்கும் வரை பரவிக்கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு 'தீ பரவட்டும்' என்று கூறினால் ஒரு கூட்டம் அதனை எதிர்க்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த தமிழகத்துக்கு எதற்கு டபுள் இன்ஜின், கொரோனா நேரத்தில் தட்டுமுட்டு சாமான்களை தட்டுங்கள், வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியவர்தான் பிரதமர் மோடி. கரப்ஷன், மாஃபியா, க்ரைம் நிறைந்திருப்பதாக தமிழகத்தை விமர்சிக்கிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்தால் அதற்கு வேந்தர் மோடி தான் என நம் முதலமைச்சர் சொல்வார்.
கரப்ஷனுக்கு வாரிசான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, டெல்லி மாஃபியாவிடம் பணத்தை இழந்த அமமுகவின் தினகரன், மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்து க்ரைமில் மாட்டிய அன்புமணி என மூவரும் மோடியுடன் தான் இருக்கிறார்கள். அரசியலில் முரட்டு தொண்டர்களை பார்த்திருப்பீர்கள். அமித் ஷாவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி தான்" எனப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications