ஆஹா.. இது லிஸ்ட்லயே இல்லையே! ஓபிஎஸ் கோஷ்டியின் எம்.எல்.ஏ பதவி காலி? எடப்பாடி எடுத்த ‘பிரம்மாஸ்திரம்’!
சென்னை : அதிமுகவில் அதிகார யுத்தத்தில் ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலத்தோடு ஓரம் கட்டிய நிலையில், அவர் மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர் 3 பேரின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியையும் பறிக்க 'பிரம்மாஸ்த்திரத்தை' எடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனால் 2017 மீண்டும் திரும்பும் என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் இடத்தை பெறப்போவது யார் என்ற மோதலில் கட்சி இரண்டாக பிளவு பட்டு கிடக்கிறது..
ஏற்கனவே தான்தான் பொதுச் செயலாளர் என சசிகலா ஒருபுறமும், ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் வேண்டும் என மறுபுறமும் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் கட்சியை எப்படியும் கைப்பற்றி விடலாம் என எடப்பாடி பழனிச்சாமி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.

அதிமுக பொதுக்குழு
பொதுக்குழுவுக்கு முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெடித்த ஒற்றை தலைமை விவகாரம் தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் வரை வந்துள்ளது. இடையே உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என பல இடங்களில் விசாரணை, தீர்ப்பு, மேல்முறையீடு என தங்களால் முடிந்த அளவு அனைத்து வித முயற்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வம் செய்து வருகின்றனர்.

பொதுச்செயலாளர்
அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை இருவருமே புரிந்து கொண்டுள்ளனர். ஆனாலும் நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் என இருவரும் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. எதிர்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் இருக்கும் நிலையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படுமா? அல்லது எடப்பாடி தரப்பில் உள்ள ஆர்பி உதயகுமாருக்கே ஒதுக்கப்படுமா என்பதே கேள்வியாக உள்ளது. இது குறித்து சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

சட்டமன்ற கூட்டத் தொடர்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்றத்தில் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருபுறம் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாகவும் மற்றொருபுறம் இபிஎஸ் ஓபிஎஸ் தனி அணியாக சட்டமன்றத்தில் திமுகவை எதிர்ப்பார்களா எனவும் பல்வேறு யூகங்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து மட்டுமல்ல அவர் வகித்து வரும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செய்து வருவதாகவும், இதனால் 2017ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு சம்பவம் சட்டமன்றத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொறடா உத்தரவு
அதாவது ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 2017ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்க வேண்டும் என கொறடா மூலம் அறிவிப்பை வெளியிட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற கருத்தும் உலாவுகிறது.

எடப்பாடி பிரம்மாஸ்திரம் இது தான்!
இதன் மூலம் சட்டமன்ற கூட்டத் தொடரில் கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றால் அது விதி மீறிய செயல் என்பதால் அவர்களது பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகர் கடிதம் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாகவும் இதன் மூலம் கட்சியில் இருந்து மட்டுமல்ல அவர் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கிவிடலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications