"கிங் மேக்கர் இல்லை.. எடப்பாடி தான் கிங்க்.." அதிமுகவில் எந்த பிளவும் இல்லை.. செம்மலை பேட்டி
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 30 பேர் புதுவையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும், இன்னொரு தரப்பு தவெகவிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்றும் கூறுவதாகவும் இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை மறுத்துள்ளார். மேலும் எடப்பாடி கிங் மேக்கர் இல்லை. எடப்பாடி தான் கிங் என்று கூறினார்.
தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான மேஜிக் எண் கிடைக்காமல் சிக்கித் தவிக்கிறது.

அதிமுக - திமுக கூட்டணியா?
ஆட்சி அமைக்க விஜய் நேற்று உரிமை கோரிய போதிலும், அவருக்கான அழைப்பை ஆளுநர் விடுவிக்கவில்லை. இதனால் விஜய் தரப்பு கடும் அப்செட்டில் உள்ளது. இதற்கிடையே, அரசியலில் பெரும் திருப்பமாக, எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் - அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக தனது ஆதரவை கொடுக்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்தது.
எனினும், இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் மறுத்தார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இதனை மறுத்தனர். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து தற்போது வரை எந்த மறுப்பும் வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. விஜய்க்கு ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு வராத நிலையில், "ஆளுநரை வைத்து டெல்லி மேலிடம் ஆட்டம் ஆடுகிறதா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.
புதுவை ரிசார்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்
இதற்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 30 பேர் புதுவையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும், இன்னொரு தரப்பு தவெகவிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்றும் கூறுவதாக பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று கூறினார். அவர் கூறுகையில், அரசியல் நிலைப்பாட்டில் எதை எப்போது, எப்படி செய்ய வேண்டும்? என்பது எடப்பாடி பழனிசாமிக்கு கச்சிதமாக தெரியும். எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கிறாரோ, என்ன நினைக்கிறாரோ அது, அந்த முடிவு நல்ல முடிவாகத் தான் இருக்கும்" என்றார்.
எடப்பாடி தான் "கிங்"
அப்போது, அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செம்மலை, எந்த முடிவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் எடுப்பார்" என்றார். அப்போது எடப்பாடி கிங் மேக்கரா என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதில் அளித்த செம்மலை, எடப்பாடி கிங் மேக்கர் அல்ல.. அவரே கிங் தான்.." என்று பதில் அளித்தார்.
இதற்கு முன்னதாக கட்சிக்குள் பிளவு என்பதை அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் கூறும்போது, "நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடனே அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு அதிமுக ஆதரவா?
புதுவை ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தவெகவிற்கு அதிமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, "தவெகவுக்கு ஆதரவு என்ற தகவல் தவறானது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு தராது" என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் அப்படியே சி.வி. சண்முகம் தலைமையில் புதுவை புறப்பட்டனர். அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்க தவெக மூத்த நிர்வாகி ஒருவர் முயற்சிப்பதாகவும், அதை முறியடிக்கவே இந்த நடவடிக்கையை அதிமுக எடுத்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.















Click it and Unblock the Notifications