ஆர்வம் காட்டாத எடப்பாடி; அச்சத்தில் அதிமுக வேட்பாளர்கள்! ரவுண்ட் கட்டும் பாஜக!
சென்னை: அதிமுக கூட்டணிக்கு எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல் பரவிவருகிறது.
பலமுனை போட்டிக்கு மக்களவைத் தேர்தல் களம் இந்த முறை மாறி இருக்கிறது. பாஜகவுடன் இருந்த அதிமுக ஒட்டோ உறவோ இனி இல்லை எனக் கூறி வெளியேறி வந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் மறைந்துவிட்டன.

கூட்டணி முறிவு குறித்து அதிமுக பலமான சத்தத்துடன் பேசி வருகிறது. அதே அளவுக்கான சத்தம் மாநில பாஜக பக்கம் இல்லை. அடக்கியே வாசிக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அதிமுக கழுத்தைப் பிடித்து வெளியே வலுக்கட்டாயமாகத் தள்ளிய பிறகும் 'நாங்கள் அதிமுக அணியில்தான் இருக்கிறோம்' என்று இராம ஸ்ரீநிவாசன் கூறிவருகிறார்.

இது என்ன மாதிரியான அணுகுமுறை என்பது புரியவில்லை. அரசியல் அறிந்தவர்களுக்கு இந்தப் பாணி புதுவிதமாகவே இருக்கிறது.

தமிழகத்திற்காக பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னை வர இருக்கிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.
மேலும் அவர் அமமுக, ஐஜேகே, பாமக, தேமுதிக ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் நடத்துவார் என்றும் தெரிகிறது. இதில் கூடுதலாக அவர் சசிகலாவைச் சந்தித்து ஆதரவுக் கேட்பார் என்றும் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து சென்று 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதற்கு இதுவரை மாநிலத் தலைமையோ அல்லது பாஜகவின் தேசிய தலைமையோ ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
பெட்டியைக் கழற்றிவிட்டு விட்டோம். மீண்டும் அதை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். அதேபோல் பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கும் ஒபிஎஸ் மீதும் கடுமையான கண்டனத்தை ஜெயகுமார் முன்வைத்து வருகிறார்.
பல கட்சிகளைப் போலவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் குழு அமைத்துள்ளார். அதிமுகவுக்கு எந்த மாதிரியான இக்கட்டான நேரத்திலும் 30% வாக்கு வங்கி என்பது நிலையாக உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினால், வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

அதற்கு ஜெயலலிதாவே சான்று. அவர் 39 தொகுதிகளில் ஒரு சீட்டு கிடைக்காத அளவுக்குப் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். அதே அளவுக்கு வரலாறு காணாத வெற்றியையும் அதிமுகவுக்கு அவரே பெற்றும் தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி பெரிதாக இல்லை என்றாலும் தேசிய அளவில் மோடி என்ற பலம் அக்கட்சிக்குப் பல மட்டங்களில் உதவி இருக்கிறது.

குறிப்பாகச் சொன்னால், ஜெ இல்லாத 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியை மோடிதான் காப்பாற்றினார் என்று திமுக சொன்னால் அது அரசியல். அதிமுகவைச் சேர்ந்த ஒபிஎஸ் கூடச் சொல்கிறார்.
அதற்கு மேல் சென்று 4 ஆண்டுகள் ஆட்சியைக் காப்பாற்றிய மோடிக்குத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லி இருக்கிறார் டிடிவி தினகரன்.
இப்படி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பகையைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் பழனிசாமி. அவரது கணக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால், அவருடன் கூட்டணிக்கு எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று எடப்பாடி தரப்பில் பலர் வேட்பாளராக நிற்பதற்கே முன்வரவில்லை என்கிறார்கள்.

அதிமுகவுக்கான மக்களவை வேட்பாளர் வேட்டை நடைபெற்று வருகிறது. சீனியர்கள் யாரும் நிற்க மறுப்புத் தெரிவித்து வருவதாகப் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.
ஒரு காலத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் நாற்காலியில் அமர சசிகலா முயற்சி எடுத்தபோது, பல ஆண்டுகளாகக் கிடப்பில் கடந்த வழக்கை வேகப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்பியதே பாஜகதான் என அன்று பேச்சுகள் அடிப்பட்டன. தங்களின் அரசியல் வீழ்ச்சிக்கு பாஜகதான் காரணம் என மறைமுகமாக டிடிவி தினகரன் பேசியும் இருக்கிறார்.
ஆனால், இன்றைக்கு அதே பாஜக மேலிடம் சசிகலாவை உள்ளே கொண்டுவர முயன்று வருவதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி அதிமுகவின் கதவை மூடினால் என்ன? டிடிவி தினகரன்.
ஓபிஎஸ், சசிகலா அணியை பாஜக பக்கம் இழுத்து அந்த வாக்கு வங்கியைச் சாதகமாக்கிக் கொள்ளலாம் எனப் பாஜக திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

மேலும், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற இரண்டாம் கட்சிகளைத் தாண்டி தமிழ்நாட்டில் வாக்கு வங்கியே இல்லாத லெட்டர் பேட் கட்சியான ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, கூட பாஜக பக்கமே நிற்கின்றன. 30% வாக்கு வங்கி வைத்து அதிமுகவைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இந்நிலையில்தான், அதிமுக தரப்பு பாஜக எதிர்ப்பை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. அண்ணாமலை மீது தினம் அர்ச்சனை செய்து வருகிறார்கள் அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த துரோகத்தை நாங்கள் மக்களிடம் சொல்லுவோம் என்கிறார் ஜெயகுமார். அது என்ன துரோகம் எனத் தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் நேரத்தில் அதிமுகவும் திமுகவும் ஒரே குரலில் பேசுகிறார்கள்.
இவ்வளவு காலம் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டுவிட்டு, இப்போது திடீரென்று பாஜக எதிர்ப்பைக் காட்டினால் சிறுபான்மை மக்கள் எல்லோரும் ஓட்டுப் போட்டு விடுவார்களா? அவ்வளவு ஏமாளிகளா? என அரசியல் நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.
சொல்லப்போனால் மக்களவை தேர்தல் 2024 களத்தில் அதிமுக இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. எப்படியாவது பாஜகவின் வாங்கு வங்கியைத் தமிழ்நாட்டில் அதிகப்படுத்திக் காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் தலைமுறை வாக்காளர்கள்தான் இக்கட்சியின் டார்கெட் ஆக உள்ளது.

அப்படி எந்த டார்கெட்டும் அதிமுகவுக்கு உள்ளதாகத் தெரியவில்லை.
மத்திய அமைச்சர் விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும் என்கிறார். மம்தா அதற்குக் கடுமையான எதிர்வினை புரிந்திருக்கிறார். சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று அறிக்கை விட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதிமுகதான் இந்தச் சட்டத்தை பாஜகவுடன் இணைந்து ஆதரித்தது என்றும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி இப்போதுவரை மவுனமாக இருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்த செம்மலை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டம் பற்றி தவறான தகவல்களை திமுக கூட்டணிக் கட்சிகள் கூறிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, "சிஏஏ என்ற இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியாவில் குடியேறி உள்ள கிட்டத்தட்ட 32 ஆயிரம் பேருக்குக் குறுகிய காலத் தேவைக்காக உருவாக்கப்பட்ட சட்டம். திமுக சொல்வதைப் போல இஸ்லாமியர்களுக்கோ மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கோ எதிரான சட்டம் அல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இப்படித் தேர்தல் நெருங்க நெருங்கத் தலைக்கு மேல் வெள்ளம் போகிறது. அதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications