"எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்.." சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி பரபர கடிதம்! அடுத்து என்ன
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு வேறு பிரிவுகளாகவே இயங்கி வருகின்றனர்.
இரு தரப்பும் மற்ற தரப்பு ஆட்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பது மட்டுமின்றி அதிமுக தொண்டர்கள் தங்கள் பின்னால் தான் உள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அதிமுக
அதிமுக கட்சியில் இருந்தும் துணை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் வழக்கு நிலுவையில் உள்ளதால் தான் பதவியில் தொடர்வதாகவே ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. இந்தச் சூழலில் இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வரும் அக். 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடிதம்
முதல் நாள் மறைந்த எம்எல்ஏக்கள், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் நிலையில், அதன் பின்னர் நடைபெறும் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம் தொடர்பாக அவர் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஆர்.பி, உதயகுமாரைத் தேர்வு செய்துள்ளோம் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக இன்று காலை தான் ஓபிஎஸ் தரப்பில் இருந்து சபாநாயகருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

காலையில் ஓபிஎஸ் கடிதம்
ஓபிஎஸ் அளித்து இருந்த அந்தக் கடித்ததில் சட்டசபையில் அதிமுக குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என்று யாராவது மனு கொடுத்தால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஓபிஎஸ் கூறி இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இரண்டாவது முறை
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் கடிதம் எழுதி இருந்தார். அப்போதும் ஓபிஎஸ் இதேபோன்ற ஒரு கடிதத்தை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் கடிதமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகச் சபாநாயகர் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications