எல்லையில் வீரர்கள் காவலிருக்க.. எனக்கு எதுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்! ர.ர.க்களுக்கு எடப்பாடி ஆர்டர்
சென்னை: பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், எதிர் வரும் தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் யாரும் தன்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதிகள் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய ராணுவமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் விளக்கம் அளித்து இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்தது.

எந்த நேரமும் இரு நாடுகளிடையே போர் ஏற்படலாம் என்ற சூழ்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில் ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும் பதிலடியாக பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கிடையே வியாழக்கிழமை இரவு நேரத்தில் பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானுக்குள்ளேயும் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், எதிர் வரும் தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் யாரும் தன்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா #OperationSindoor நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications