மேட்டர் சீரியஸ்.. உடனே ‘இதை’ செய்ய வேண்டும்! அவசர கோரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 5,154 ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும் என்றும், இதுவரை தேர்வு நடத்திடாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கும் உடனடியாகத் தேர்வு நடத்தி காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிரப்ப வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியே ஆகும். மற்றதெல்லாம் செல்வமே அல்ல' ' என்று மக்கள் ஒவ்வொருவருக்கும் கல்விதான் பெருஞ்செல்வம் என்பதை திருவள்ளுவர், ஒன்றரை அடி குறள் மூலம் விளக்கியுள்ளார்.

edappadi palaniswami aiadmk mk stalin

வள்ளுவரின் அடியொற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலம் முழுவதும் உரிய முறையில் தமிழக மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிப்பதையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டோம். கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம், பல்வேறு வகைகளில் கல்வித்துறையை சீரழித்து வருவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தமிழ் நாட்டில் அம்மாவின் அரசு இருக்கும்போது, துறைகள்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தது.

குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை, கல்வித் துறை மற்றும் காவல் துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதை மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் உறுதி செய்தன. குறிப்பாக 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சுமார் 20,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது இன்றளவும் வரலாற்றுச் சாதனையாக உள்ளது.

ஆனால், 2021-ல் திரு. ஸ்டாலினின் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து துறைகள்தோறும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கல்வித் துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் அவற்றை உடனடியாக நிரப்பிடக் கோரி பலமுறை நான் இந்த அரசை வலியுறுத்தி இருக்கிறேன். அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு சங்கங்களும் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்தி வருகின்றன.

5,154 தற்காலிகப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, அதன் மூலம் மாணவர் கற்றல் நலன் பாதுகாக்கப்படுவதாக திரு. ஸ்டாலினின் திமுக அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இந்த அரசு 2024-ம் ஆண்டு, BT / BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 3,192 என்று விளம்பரம் செய்து அதற்காக நியமனத் தேர்வு நடத்தியது. தற்போது இதில் பல பணியிடங்களை குறைத்து சுமார் 2,803 பணியிடங்களுக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. எனவே, இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் இருந்து 5,154 காலிப் பணியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்படுபவர்கள் பெற்றோர் சங்கம் மற்றும் தலைமையாசிரியர் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின் பணிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைவதாகவும், அதுபோலவே, தற்காலிக முதுகலை ஆசிரியர்களின் பணிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைவதாகவும், இதனால், அரசின் பொதுத் தேர்வுகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் பணிக்கு போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை என்று தெரிகிறது.

10 மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய தற்காலிக ஆசிரியர்கள் முன்னதாகவே பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களில் பலர் பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் (B.Ed.,) கல்வித் தகுதி பெறாத, சாதாரண பட்டதாரிகளாக உள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற மாதம் முதல் பல மாவட்டங்களில் "தினகரன் அறிவொளித் திட்டம்" என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அதன்கீழ் செய்தித்தாள்கள் விநியோகம் செய்வதற்கு வருட சந்தாத் தொகையாக ஒரு பள்ளிக்கு தலா ரூ.2,800 வசூலிப்பதாகவும், இதனை முன் பணத்தொகையாக மாவட்ட கனிமவள நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகையை அரசுப் பள்ளிகள் வசூல் செய்து, மாவட்ட கனிமவள நிதி தலைப்பின் கீழ் செலுத்துமாறு, மாவட்ட ஆட்சித் தலைவரும், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலரும் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகின்றன. உதாரணமாக, அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 348 அரசுப் பள்ளிகளுக்குத் தலா ரூ. 2,800 வீதம் ரூ. 9,74,400-ஐ மாவட்ட கனிமவள நிதி என்ற தலைப்பில் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஒரு கட்சி சார்புள்ள தனியார் நாளிதழுக்கு இதுபோன்ற சந்தா வசூலிக்க அரசு அதிகாரிகளை ஈடுபடுத்துவது கண்டனத்திற்குரியது. உடனடியாகத் தமிழ் நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக வசூல் செய்த பணத்தை உடனடியாக அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எனவே, இனியாவது பள்ளிக் கல்வித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர், இந்த ஆண்டு (2024) BT / BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியவர்களில் இருந்தே, காலியாக உள்ள 5,154 பணியிடங்களுக்கும் முழுமையாக நிரப்பிட வேண்டும் என்றும்; இதுவரை தேர்வு நடத்திடாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கும் உடனடியாகத் தேர்வு நடத்தி காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்றும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+