அமமுகவிலிருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி! டிடிவி கூடாரத்துக்கு எடப்பாடியின் மெசேஜ்!
சென்னை: அமமுகவிலிருந்து விலகி தனது தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தவர்கள் அனைவருக்கும் முக்கிய பதவிகளை வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதன் மூலம் தன்னை நம்பியோரை கைவிடமாட்டேன் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளதோடு, இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை இப்போது கூட அமமுகவிலிருந்து யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்பதை இந்த புதிய பதவி நியமனங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த எஸ்.டி.கே. ஜக்கையன்,சீனிவாசன், திருச்சி மனோகரன், கிருஷ்ணா ராதா, கோமல் அன்பரசன், திருப்பூர் சிவசாமி, இசக்கி சுப்பையா, அய்யாதுரை பாண்டியன், ஒரத்தநாடு சேகர், உட்பட இன்னும் பலர் டிடிவி தினகரன் மீதான அதிருப்தி காரணமாக வரிசையாக அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் ஆவர்.
மேற்கண்ட இவர்கள் அனைவருக்கும் அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முக்கியப் பதவிகளை அள்ளிக் கொடுத்து கவுரவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருச்சி மனோகரனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி, சீனிவாசனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி, கிருஷ்ண ராதாவுக்கு அதிமுக மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளர் பதவி, அய்யாதுரை பாண்டியனுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி என வழங்கியுள்ளார்.
இதேபோல் அமமுகவிலிருந்தும், ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்தும் யார் வந்தாலும் அவர்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ள தயார் என்பதோடு வரும் நாட்களில் உரிய முக்கியத்துவம் தரப்படும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி தனது நடவடிக்கைகள் மூலம் உணர்த்தியுள்ளார். அமமுகவில் ஊசலாட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் சிலரை வளைக்க அதிமுக லோக்கல் பிரமுகர்கள் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் அமமுக அதிருப்தி நிர்வாகிகளையும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள ஓரிரு முக்கிய பிரமுகர்களையும் அதிமுகவுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இது குறித்து டிடிவி தினகரன் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தக்க வைக்க சற்று போராட வேண்டியதாக தான் உள்ளது.












Click it and Unblock the Notifications