அதிமுகவின் முதல் வாக்குறுதி.. 2026 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். அதோடு தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தயாராக தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலையொட்டி அதிமுகவின் முதல் வாக்குறுதியை எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதலமைச்சர், "அண்ணா பெயரை அஇஅதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.
அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? "அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அஇஅதிமுக.
ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்.
தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள். திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications