சனாதன - சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கி தள்ளும் ஆயுதம் கல்வி தான்.. அகரம் விழாவில் கொதித்த கமல்
சென்னை: "சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்" என்று நடிகர் சூர்யாவின் அகரம் விழாவில் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் பேசினார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? என்பது பற்றியும் கமல்ஹாசன் பேசினார்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவிகளை படிக்க வைத்து வருகிறது. இந்நிலையில் அகரம் பவுண்டேஷனின் சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் நீட் எதிர்ப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க முடியாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட முடியமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது.ஏனென்றால் 2017 க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடங்க முடியவில்லை. இப்போது புரிகிறதா? ஏன் நீட் வேண்டாம் என்கிறோம் என்று.
2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த சட்டம். அகரம் நினைத்தால் ஒன்று செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. இது சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான்.
இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது.ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும். இதை தாங்கி பிடிக்க வேண்டும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. அதை புரிந்து கொள்ள எனக்கு 70 வயது ஆகிவிட்டது.
இப்போது நான் சொல்கிறேன். நேற்று நான் முதலமைச்சருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த என்ஜிஓக்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும். அவர்கள் பண உதவி கேட்பது இல்லை. அனுமதி கேட்கிறார்கள். அதில் நமக்கு என்ன வலிக்க போகிறது என்று கூறினேன். கொடுத்துருங்க அய்யா என்றேன். அதற்கு அவர் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார். நாங்கள் செய்யத்தான் போகிறோம்.. செய்துக்கொண்டிருக்கிறோம் என்றார். அந்த பெருமையோடு தான் இங்கு வந்தேன்.
இதே திட்டத்தை பார்த்து அரசுக்கு ஐடியா வந்தால் அதில் தப்பு கிடையாது. நல்ல திட்டம் எதிரியிடம் இருந்தாலும் கேட்கலாம். இவர் நம்ம பிள்ளை (சூர்யாவை கைகாட்டினார்). இங்கிருந்து எடுக்காமல் எங்கிருந்து எடுப்பது. ஆக, அரசு பெரிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதில் எனக்கும், உங்களுக்கும் பங்கு உண்டு. இது கல்வி சம்பந்தப்பட்டது. நீட் கூட அரசியல் அல்ல. கல்வி சம்பந்தப்பட்டது தான். இந்த விழாவிில் அரசியல் பேசக்கூடாது. நாளை போகும் இடத்தில் பேசி கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications