சென்னையில் பயங்கரம்.. கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணி, சிசுவோடு பலி
சென்னை: சென்னையில் மெரினா கடற்கரை அருகே ஏற்பட்ட மோசமான விபத்து அனைவருக்கும் பெரும் சோகத்தைத் தருவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகன விபத்துகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது.
இருந்த போதிலும், தினசரி வாகன விபத்துகளால் நாம் பல விலை மதிப்பற்ற உயிர்களை இழக்கிறோம். அப்படியொரு மோசமான விபத்து தான் மெரினாவில் நடந்து உள்ளது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் சிவா. 27 வயதான இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கும் லலிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 22 வயதான லலிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் சென்னை திருவல்லிக்கேணி நல்லத்தம்பி தெருவில் வசித்து வந்தனர்.

விபத்து
இருவரும் நேற்று இரவு மெரீனா காமராஜா் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சிவாவின் பைக்குடன் மோதி உள்ளது. இதனால் நிலைதடுமாறிய நிறைமாத கர்ப்பிணி லலிதா, பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் சக்கரம் லலிதா மீது ஏறியது.

8 மாத கர்ப்பிணி பலி
இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணி லலிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லலிதா வயிற்றில் இருந்த சிசுவைக் காப்பாற்றத் தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவவே லலிதாவின் உடல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்களிடம் சிசுவை எப்படியாவது காப்பாற்றுமாறு சிவா கெஞ்சியுள்ளார்.

சிசுவும் பலி
லலிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விபத்தால் வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதேநேரம் விபத்தை ஏற்படுத்திய கடற்படைக்குச் சொந்தமான பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளது. அந்த வாகனத்தைத் துரத்திச் சென்ற பொதுமக்கள், நேப்பியர் பாலம் அருகே பேருந்தைத் தாக்கினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வழக்கு விசாரணை
அங்கிருந்த பொதுமக்களிடம் பேசி போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இப்போது பேருந்து ஓட்டுநர் ராகேஷ்குமாா் (29) என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வாகன விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications