தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி.. அதிமுக முழு ஆதரவு! ECக்கு வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் சரியானதா என்று சரிபார்க்க வேண்டும்.

election-commission-sir-phase-2-revision-work-in-tamil-nadu-aiadmk-offers-full-support

இரட்டை வாக்குகள்

குறிப்பாக, தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் (Summary Revision மற்றும் Intensive Revision) என்ற முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.

எனவேதான், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டங்களில், தமிழ் நாட்டில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீத சரிபார்ப்பு இல்லாமல் முழுமையானதாக இல்லை என்பதால், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்துள்ளோம்.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்

குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஒப்புதலோடு இந்தியத் தேர்தல் ஆணையத்தின், மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள்; மாநில அளவில் சென்னையில் நடைபெறும் கூட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களிலும், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை நாங்கள் உரிய ஆதாரங்களுடன் எடுத்து வைத்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கோரி வருகிறோம்.

உதாரணமாக, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதேபோல், சுமார் 8 ஆயிரம் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்கான ஆதாரங்களை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும், அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இடைத் தேர்தல் முடியும்வரை அப்பெயர்கள் நீக்கப்படவில்லை.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2024-ஆம் ஆண்டு, சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், இரட்டை வாக்குகள், முகவரி மாற்றம் மற்றும் இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும்; இப்படி சுமார் 44 ஆயிரம் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

31 ஆயிரம் பெயர்கள் நீக்கம்

அதைத் தொடர்ந்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் இன்றுவரை சுமார் 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, கழகத்தின் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக இடம் பெற்றுள்ளது என்று நாங்கள் தெரிவித்தோம். தொடர்ந்து, தியாகராயநகர், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் உள்பட பல தொகுதிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பினை நடத்தி வருகிறது.

உரிய ஆதாரங்களுடன் வலியுறுத்தினோம்

எங்களது கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்று ஆளும் விடியா திமுக ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் அரசின் தோல்விகளை தழிழகம் முழுவதும் எடுத்துக்கூறும் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் போது, பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாத இரட்டை வாக்குகள், இறந்தவர் வாக்குகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் ஆய்வு செய்து திருத்திய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார். வாக்காளர் சரிபார்ப்பு கோரிக்கையை சென்னை மட்டுமல்லாது, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் உரிய ஆதாரங்களுடன் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

முழு மனதுடன் வரவேற்கிறோம்

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி கொண்டுள்ளது.

விளம்பர ஆட்சி நடத்தும் திமுக

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவித நலத் திட்டங்களையும் செயல்படுத்தாமல், எங்களது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பது; இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குவது; வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிட்டுவிட்டு, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; அத்தேர்தலில் திமுக தோல்வியுறுவது உறுதி, என்று தெரிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களைத் தேடும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், இனியாவது தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஒருசில மாதங்களுக்காவது தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்ய வலியுறுத்துகிறேன். என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+