Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: அவ்வளவுதானா பழக்கம்.. ரொம்ப ஹர்ட் ஆகுது சாரே! முரண்டு பிடிக்கும் காங்கிரஸ்.. செக் வைத்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் கருத்து முரண்பாடு இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால், கூட்டணி நிலைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியிலேயே தொடரலாமா அல்லது நடிகர் விஜய் தொடங்கிய தவெகவில் இணையலாமா? என்ற இரட்டை நிலைப்பாட்டில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இது கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைக்காக காங்கிரஸ் குழு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்ததன் மூலம் கூட்டணி தொடரும் என்பது தெளிவானது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 mk stalin

திமுக காங்கிரஸ் கூட்டணி

ஆனால் அதற்குப் பிறகு தான் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து 'கூட்டணி ஆட்சி' குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் பண்பாட்டில் இத்தகைய அதிகாரப் பகிர்வு நடைமுறை இல்லை என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருப்பதாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஸ்டாலின் காங்கிரஸ் மோதல்

இதற்கிடையில், தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க திமுக காலதாமதம் செய்தது காங்கிரஸ் தலைமையில் மனக்கசப்பை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த தாமதம் குறித்து ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும், உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் குறிப்பிட்ட தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு தொடங்கப்படும் என திமுக அறிவித்தது.

அதிகாரப் பகிர்வு கோரிக்கை

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய அளவிலான சில தலைவர்கள் பொதுவெளியில் திமுக மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றாலும் தங்களது கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்து திமுக அமைச்சர்களும் கருத்து தெரிவித்ததால், இரு கட்சிகளின் தொண்டர்களிடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகத் உருவாகியுள்ளது.

தொகுதி பங்கீடு சிக்கல்

காங்கிரஸ் தரப்பில், தமிழகத்தில் தங்களது அரசியல் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இந்தக் கோரிக்கைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும்; இளைஞர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்; கூட்டணி ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களில் தங்களது வெற்றி சதவீதம் உயர்ந்ததாகவும், கூட்டணிக்கு தாங்களும் முக்கிய பங்களிப்பு செய்ததாகவும் அக்கட்சி வலியுறுத்துகிறது.

கூட்டணி பதற்றம்

மறுபுறம், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் பெரும்பான்மை பலம் குறையக்கூடும் என்ற கவலை திமுகவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதனால் அதிக இடங்களில் தாமே போட்டியிட வேண்டும் என்ற வியூகம் திமுக தரப்பில் உருவாகியுள்ளது. மேலும், கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் வென்ற சில தொகுதிகளை மீண்டும் தங்களிடம் வைத்துக்கொள்ளும் எண்ணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் வியூகம்

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து திமுக ஒரு தனித்திட்டத்தை பின்பற்றுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் சிறிய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடித்து, இறுதியாக காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் இறுதி கட்டத்தில் ஒதுக்கீடு அறிவித்து காங்கிரஸை ஏற்கும் நிலைக்கு கொண்டு வரலாம் என்ற அரசியல் கணக்கீடும் பேசப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

மொத்தத்தில், 'ஆட்சியில் பங்கு தர முடியாது' என்ற திமுக நிலைப்பாடு மற்றும் 'அதிகாரப் பகிர்வு அவசியம்' என்ற காங்கிரஸ் கோரிக்கை ஆகிய இரு எதிர்மறை நிலைப்பாடுகள் தான் கூட்டணியில் சிக்கலை உருவாக்கியுள்ளன. இநிலையில், வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இந்த முரண்பாட்டை தீர்க்குமா அல்லது புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், தற்போது நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+