உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பில் இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விசிக மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு விவகாரம் இழுபறியாக நீடித்து வருகிறது. 8 தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆறே அதிகம் தான் என திமுக சொல்கிறதாம். இதனால் உள்ளே புகைச்சல் இருந்தாலும் திருமா அதனை வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்கின்றனர் விசிகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக), தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஐயூஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட சிறிய கட்சிகளும் திமுக தலைமையால் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓரளவு சிக்கலின்றி பகுதி பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

திமுக கூட்டணி
இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளும் சில நாட்கள் இழுபறியாக நீடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் மூன்று கட்டமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் இரண்டு கட்டமாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இந்த இரண்டு கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. ஆனால் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
திமுக விசிக
இந்த சூழ்நிலையில், விசிக உடனான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இதுவரை திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விசிக ஒரே ஒரு முறை மட்டுமே அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விசிக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் திமுக தரப்பில் 6 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என முன்மொழிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமா ஸ்டாலின் சந்திப்பு
இந்த முன்மொழிவை விசிக ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில், தமிழகத்தில் 8 தொகுதிகளும், புதுச்சேரியில் 2 தொகுதிகளும் ஒதுக்க வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவன் கோரிக்கை
ஆனால் திமுக தரப்பில் 6 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென கூறப்பட்டதால், பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், நேற்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிக தரப்பு வராதது அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மட்ட நிர்வாகிகள் 8 தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாறக் கூடாது என் தலைவர் திருமாவளவனை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக - விசிக பேச்சுவார்த்தை
கடந்த தேர்தல்களில் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாகவும், அதனால் இந்த முறை குறைந்த தொகுதிகளை ஏற்க முடியாது என்ற மனநிலை விசிக நிர்வாகிகளிடையே நிலவுகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அல்லது அடுத்த சில நாட்களில் திமுக - விசிக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி பங்கீடு
அந்த பேச்சுவார்த்தையின் முடிவே கூட்டணியின் இறுதி வடிவத்தை நிர்ணயிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், விசிக உடனான தொகுதி பங்கீடு விவகாரம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 7 தொகுதிகளா அல்லது 8 தொகுதிகளா என்ற கேள்விக்கான தீர்வு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications