Election Exclusive: தனி மரமாக நிற்கும் ஓபிஎஸ்.. தை மாதம் முடிந்தும் வழி பிறக்கலை போல.. என்ன முடிவு?
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தொடர்ச்சியாக பேசி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது தை மாதம் முடிவடைந்தும் இன்னும் முடிவை எடுக்கவில்லை. என்டிஏ கூட்டணி அல்லது தனிக்கட்சி ஆகிய இரு வாய்ப்புகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசித்த நிலையில், ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து விலகுவதால், என்ன முடிவு எடுப்பது என்று ஓபிஎஸ் தாமதம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக தலைமை ஒவ்வொரு வாரமும் 2 மாநாடுகளை நடத்தி வருகிறது. இளைஞரணி, மகளிரணி, பூத் கமிட்டி என்று அடித்தளத்தை இன்னும் வலுவாக கட்டமைத்திருக்கிறது. மறுபக்கம் கூட்டணி கட்சிகளையும் இணக்கமாக வைத்துள்ளது.

ஓபிஎஸ் முடிவு?
அதேபோல் அதிமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டது. இன்னும் சில நாட்களில் பிரச்சாரத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். தவெகவும் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் மட்டும் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
3 வாய்ப்புகள்
ஜனவரி மாதம் தொடங்கிய போது ஓபிஎஸ் முன்னிலையில் என்டிஏ கூட்டணி, அதிமுகவுடன் இணைப்பு மற்றும் தனிக்கட்சி என்று 3 வாய்ப்புகள் இருந்தன. ஆனால் ஜனவரி மாதத்தில் அதிமுகவுடன் இணைப்பு என்ற வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி மூடிவிட்டார். இதனால் என்டிஏ கூட்டணியில் இணைந்து பாஜக சார்பாக போட்டியிடுவது ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
எஸ்கேப்பான ஆதரவாளர்கள்
மறுபக்கம் தனிக்கட்சி தொடங்கலாம் என்று ஓபிஎஸ் கருதினாலும், அவருடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட பலரும் திமுக மற்றும் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் தேனியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
தேனியில் என்ன செய்கிறார்?
இவர்களில் பலரும் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்த போது உடனிருந்தவர்கள். இதனால் ஓபிஎஸ் தேனி மாவட்டத்திலேயே முடங்கி இருக்கிறார். தற்போது தன்னுடைய பேரனுக்காக ஏலக்காய் ஏற்றுமதி தொழிலை மேம்படுத்த கட்டப்பட்டு வரும் கட்டடத்திலேயே அதிக நேரத்தை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
தை பிறந்தும் வழி பிறக்கவில்லையா?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி வந்த ஓபிஎஸ், தை மாதம் முடிவடைந்த பின்னரும் இன்னும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடவில்லை என்றால், அவரின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இதனால் ஓபிஎஸ் முடிவை எதிர்நோக்கி அவரின் சமூக மக்கள் பலரும் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications