Election Exclusive: எல்லாம் ராகுல் முகத்துக்காக தான்.. காங்கிரஸுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்! ஆனாலும் அடங்காத தலைகள்!
சென்னை: காங்கிரஸுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். பல மாதங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசி வந்த காங்கிரஸ் கட்சிக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உரசல்கள் இருந்தாலும் காங்கிரஸ் திமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தொடரும் என்கின்றனர். உள்ளூர் தலைவர்கள் சிலர் உரக்க பேசினாலும் தேசிய தலைமை திமுக உடனான உறவைத் தான் பேண விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள உரசல் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்ததுதான் இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் டெல்லியில் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு காங்கிரஸ் தரப்பு தன் நிலைப்பாட்டில் மாற்றம் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸின் கோரிக்கையை ஏற்றும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் பிப்ரவரி 20க்கு பிறகு மற்றதெல்லாம் நடக்கும் என்கின்றனர் திமுகவினர்.

2026 சட்டமன்ற தேர்தல்
1952 முதல் 1967 வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் அதன்பிறகு திராவிட கட்சிகளின் எழுச்சியால் காங்கிரஸ் கூட்டணி அரசியலுக்குள் தள்ளப்பட்டது. 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து வருகிறது. 2006-ல் 50 தொகுதிகளில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 2011-ல் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. 2016-ல் 41 இடங்களில் 8 வெற்றி, 2021-ல் 25 இடங்களில் 18 வெற்றி என்ற கணக்கில் கட்சி நிலை மாறி வந்துள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்த முறை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்தது. ஆனால் வழக்கத்தை விட அதிக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 41 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள், உள்ளாட்சி தேர்தலில் 20% இட ஒதுக்கீடு, மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையும் சேர்த்ததால் திமுக தரப்பு அதிருப்தியடைந்ததாக தகவல். இதனால் திமுக தரப்பு பேச்சுவார்த்தை குழுவை அமைக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
இந்த பின்னணியில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மேலிடம் தலைவர்கள் தமிழ்நாடு நிர்வாகிகளை தனியாக அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது "70 நாட்களாக திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை; கூட்டணியில் நம்மை மதிப்பதில்லை" என தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பு அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் 39 தொகுதிகள்
இதற்கு பதிலளித்த மேலிடம், "சென்னை திரும்பியவுடன் திமுக தலைமையுடன் நேரடியாக பேசுங்கள். ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யலாம். முதலில் 41 தொகுதிகள் கேளுங்கள்; எப்படியும் 39-க்கு கீழ் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தரப்பு தன் கோரிக்கையை ஒரு அளவிற்கு தளர்த்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த தகவல்கள் வெளிவந்த உடனேயே திமுக தலைமையும் 22-ம் தேதி முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவித்தது.
காங்கிரஸ்
இருப்பினும் உடனடியாக அல்லாமல் சில நாட்கள் இடைவெளியுடன் தொடங்குவது, கூட்டணிக்குள் இன்னும் முழுமையான ஒத்துழைப்பு உருவாகவில்லை என்பதைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு விவகாரத்தில் திமுக எந்தவித தளர்வும் காட்ட விரும்பாத நிலையில், காங்கிரஸ் தன் கோரிக்கையை தேர்தல் வெற்றிக்குப் பிறகு பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உரசல் இருந்தாலும், இந்த தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
திமுக காங்கிரஸ் சண்டை
அதே நேரத்தில் காங்கிரஸ் தேசிய தலைமையை கையில் வைத்திருக்கும் ராகுல் காந்தி மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து திமுக தலைமையை கோபப்படுத்தும் வகையில் பேசி வரும் நிலையில் அதனை ராகுல் காந்தி கண்டும் காணாதது போல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ராகுலுக்காக தான் கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசியிருந்தாலும், காங்கிரஸ் கட்சியினர் இன்னும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் இந்த பிரச்சனைக்கு எப்போது முடிவு எட்டப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications