கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் மீண்ட திருவண்ணாமலை விவசாயியின் உயிர்! அவசரத்தில் வந்த பணம்! மகிழ்ச்சி
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.5000 உயர்த்தி தந்ததே தேர்தலை முன்னிறுத்திதான் என்று எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்மாவதி என்ற பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன காரணம்?
தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அதிமுக எடப்பாடி பழனிசாமி, அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்தத் தொகை வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டி வருகிறார்கள்..

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
மக்கள் வரிப்பணத்தை முறையற்ற வகையில் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், இது தேர்தல் பயத்தினால் எடுக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்..
5,000 அல்ல, 50,000 கொடுத்தாலும் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று டி.டி.வி. தினகரன் கடுமையாக சாடியிருக்கிறார்.. மறுபுறம், இந்தத் திட்டம் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், அரசியல் ஆதாயத்திற்காகப் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திமுக அரசு - ஸ்டாலின்
அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், இந்தத் தொகையைப் பெறுவதில் குடும்பங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக அரசு வழங்கும் பணத்தை ஏற்க கூடாது எனக் கூறி தவெக தொண்டர் ஒருவர் தன்னுடைய அம்மாவை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகி, பெரும் அதிர்வலையை உண்டுபண்ணியிருந்தன..
மொத்தத்தில் 5 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், எதிர்க்கட்சிகளால் இது "தேர்தல் கால நாடகம்" மற்றும் "நிதி மேலாண்மை சீர்குலைவு" என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை விவசாயி
இப்படிப்பட்ட சூழலில், மயங்கி விழுந்த தன்னுடைய கணவர் உயிரை காப்பாற்றியது; ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகைதான் என்று பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.. அத்துடன் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது மருதாடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி பத்மாவதி - சுப்பிரமணி. இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.
விவசாயியான சுப்பிரமணிக்கு, கடந்த 13ம் தேதி காலை சுப்பிரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார்.. இதனால் பதறிப்போன பத்மாவதி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உறவினர்களிடம் கடன் கேட்க முயன்றுள்ளனர்..
விவசாயி உயிரை காத்த ரூ.5000
அந்த நேரத்தில்தான், தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 திடீரென வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாதக மெசேஜ் வந்துள்ளது. இந்த மெசேஜ் பார்த்ததுமே பத்மாவதிக்கு பெரும் மகிழ்ச்சி தாங்கவில்லை..
உடனடியாக கணவரை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தொடர் சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு அட்டை பெற எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனிடம் பத்மாவதி வேண்டுகோள் வைத்துள்ளாராம்..
இதுகுறித்து எம்பியிடம், பத்மாவதி சொல்லும்போது, "என்னுடைய கணவருக்கு உடம்பு ரொம்பவும் முடியாமல் போய்விட்டது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமை தொகை ரூ.5,000தான் என் கணவரின் உயிரை காப்பாற்றியது. முதல்வருக்கு என்னுடைய நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பத்மாவதி நெகிழ்ச்சி
பிறகு செய்தியாளர்களிடம் பத்மாவதி சொல்லும்போது, "மகளிர் விடியல் பயணம் பெண்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது போல், மகளிர் உரிமைத்தொகையும் மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது..
அதிலும் அப்போது வழங்கியிருக்கும் ரூ.5,000, பெண்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.. உரிய நேரத்தில் பணம் கிடைத்ததால், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது கணவருக்கு உரிய சிகிச்சை தர முடிந்தது. முதல்வருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்..
முதல்வருக்கு பத்மாவதி கண்ணீர் மல்க நன்றி சொன்ன இந்த வீடியோவை, திமுக தரப்பினர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்... சொன்னதை செய்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்றெல்லாம் பாராட்டி வருகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications