மின்சார வாரியம் சர்ப்ரைஸ்! கரண்ட் மீட்டரில் கை வைத்தால் அவ்ளோதான்! 15 நாட்களில் ரூ.96.70 லட்சம் வசூல்
சென்னை: மின்சார வாரியம் நடத்திய அதிரடி சோதனையில் 78 மின் திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்ட சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.96.70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து மின்சார வாரியம் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பில் எழுந்தது..

தமிழக மின்சார வாரியம்
இதையடுத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் மின் பயன்பாட்டை ஆட்களின்றி துல்லியமாக கணக்கிட, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. 2026-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
அந்தவகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்துள்ளது.. அதன் அடிப்படையில் சுமார் ரூ.20,000 கோடி செலவில், மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக மின்வாரியம்
தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. பல நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன; யாருக்கு ஒப்பந்தம் தருவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் சென்னை போலவே விரைவில் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில், மின்சார வாரியம் நடத்திய அதிரடி சோதனையில் 78 மின் திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இந்த முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்ட சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.96.70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மின் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதோடு, விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மின்சார வாரியம் - விதிமீறல்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கடந்த 16.12.2025 முதல் 31.12.2025 வரை தமிழகத்தின் முக்கிய மின் பகிர்மான வட்டங்களில் அதிரடி கூட்டு ஆய்வு நடத்தினர். சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, மொத்தம் 78 மின் திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டறியப்பட்ட முறைகேடுகளுக்காக, சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.96,70,254 விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின் இழப்பைத் தடுக்கவும் நேர்மையான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் இது போன்ற அதிரடி சோதனைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டு புகார் எண்கள்
மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.5,01,000/-(ரூபாய் ஐந்து லட்சத்து ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications