மின்சார துறையின் திடீர் அறிவிப்பு.. "கரண்ட் பில்" ரீடிங்கில் மாற்றம் வருதா? அப்ப ஸ்மார்ட் மீட்டர்கள்?
சென்னை: ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என்றும், அதுகுறித்த டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், திடீரென மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.
வழக்கமாக, வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. அந்தவகையில், உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய "ஸ்டேடிக்" என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

முறைகேடுகள்: அதன்படி ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளையும் மேற்கொள்கிறது. நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர்.. இதைத்தவிர, வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது என்ற புகார்களும் வெடித்தன. இந்நிலையில்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு வேகப்படுத்தியது.
தமிழ்நாடு அரசு: ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? இந்த திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் . அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், கடந்த மாதம், முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சர்வதேச டெண்டரையும் அரசு கோரியிருந்தது.
ஸ்மார்ட் மீட்டர்கள்: இதனிடையே கடந்த மாதம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியானது.
இந்த திட்டத்தை மாநிலம் முழுதும், 1, 2, 3 ஆகிய தொகுப்புகளாக மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. முதல் கட்டமாக, மேற்கு மாவட்டங்களில், 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில், தென் மாவட்டங்களில், 80 லட்சம் மீட்டர்களும் பொருத்த, கடந்த மாதம் ஜுனின் துவக்கத்தில் டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்க, கடந்த 5ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. பிறகு, டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
திடீர் ரத்து: அதாவது, 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டே தொடங்கப்பட்டு, வரும் மார்ச் 2025க்குள் முடிக்கப்பட உள்ளதாக காலநிர்ணயமும் செய்யப்பட்டிருக்கிறது.. இந்நிலையில், டெண்டரை திடீரென ரத்து செய்து, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "டெண்டர் விளக்க கூட்டத்தில் பங்கேற்ற, 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. அதற்கேற்ப, டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதனால், நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், 3 தொகுப்புகளுக்கும் ஒன்றாக சேர்த்து, புதிய, டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
புது புரட்சி: எப்படியோ ஸ்மார்ட் மீட்டர் பணி கட்டாயம் பொருத்தப்படும் என்று நம்பப்படுகிறது.. இதனால் குளறுபடிகள் நீங்குவதுடன், ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகமாவது, தமிழகத்தில் எரிசக்தி துறையில், ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications