ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு.. திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.. ஸ்டாலினுக்கு ராகுல் துரோகம்?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த மிக வலுவான ஒரு கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையிலான உறவு அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.
சகோதரத்துவத்தில் தொடங்கிய பயணம்
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான இந்த நீண்டகாலப் பயணம் 2016 காலகட்டத்தில் மிக நெருக்கமான ஒன்றாகத் தொடங்கியது. மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் சோனியா காந்தி காலத்திலிருந்தே இந்த இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவினாலும், மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையிலான நட்பு இந்த கூட்டணியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது.

ஒரு பொது மேடையில் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலினை "எனது மூத்த சகோதரர்" என்று அழைத்தது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன்பின் பல இடங்களில் ஸ்டாலினை தனது சகோதரர் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். தேசிய காட்சிகளை எல்லாம் எதிர்த்து ராகுலை ஸ்டாலின் முதல் ஆளாக ஒன்றல்ல இரண்டு முறை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
ஸ்டாலின் அவர்களுடன் எனக்கு இருப்பது அரசியல் உறவு மட்டுமல்ல, அது ஒரு குடும்ப உறவு என்று ராகுல் பலமுறை நெகிழ்ந்துள்ளார். இந்த 'சகோதரத்துவ' பிணைப்புதான் கடந்த பல தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த முக்கிய காரணியாக அமைந்தது. சொல்லப்போனால், காங்கிரஸ் இன்று தேசிய அளவில் மீண்டும் ஒரு வலுவான நிலையை எட்டியிருப்பதற்கு திமுக வழங்கிய பேராதரவு ஒரு முக்கிய அடித்தளம் என்பதை அரசியல் விமர்சகர்கள் மறுப்பதற்கில்லை.
திடீர் மாற்றம்: தவெக தலைவருடன் காங்கிரஸ் ஒப்பந்தம்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பு தமிழக அரசியலின் போக்கை மாற்றியுள்ளது. குறிப்பாக இளைஞர்களின் பேராதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் மக்கள் நல அரசை அமைப்பதற்கான தெளிவான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முறைப்படி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மதச்சார்பற்ற, முற்போக்கு அரசியலை முன்னெடுப்பதே காங்கிரஸின் அடிப்படை நோக்கம். தமிழக மக்களின் தீர்ப்பை மதித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் தவெக அரசுக்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளோம்."
நிபந்தனையுடன் கூடிய ஆதரவு
இந்த புதிய கூட்டணி சில முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பது காங்கிரஸின் முதன்மையான நிபந்தனையாகும்.
இந்தக் கூட்டணி வெறும் அரசு அமைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், வரும் காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
காமராஜர் - பெரியார் - அம்பேத்கர்: புதிய இலக்கு
தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தமிழகத்தில் "பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை" மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரின் சமூக நீதி கருத்துக்களையும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளையும் பின்பற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்போவதாக விஜய் மற்றும் காங்கிரஸ் இணைந்து உறுதிபூண்டுள்ளது, என்று அறிக்கையில் கூறி உள்ளது.
"சகோதரர்" என்று அழைக்கப்பட்ட உறவு இன்று முறிந்து போனது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தமிழக அரசியலில் புதிய ரத்தம் பாய்ச்சுவதாக தவெக-காங்கிரஸ் கூட்டணி பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
